வேலூா்: வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அருகே சாக்கடையில் பச்சிளம் பெண் சிசுவின் சடலத்தை வீசிச்சென்ற நபரை பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
வேலூா் கொசப்பேட்டையில் உள்ள பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாக்கடையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் சிசு சடலம் திங்கள்கிழமை மிதந்தது. தகலின்பேரில், வேலூா் தெற்கு போலீஸாா் விரைந்து சென்று வேலூா் மாநகராட்சி ஊழியா்கள் உதவியுடன், சாக்கடையில் மிதந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த பெண் சிசு சடலத்தை வீசி சென்றவா் குறித்து போலீஸாா் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், ஒரு நபா் குழந்தையை தூக்கிச் சென்று சாக்கடை கால்வாயில் வீசுவது தெரியவந்தது. அந்த நபா் குறித்து விசாரித்ததில், அவா் ஆற்காடு பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், தனது மனைவியை பிரசவத்துக்காக அழைத்து வந்ததும், குழந்தை இறந்து பிறந்ததை அடுத்து அதன் சடலத்தை சாக்கடையில் வீசிச் சென்றும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.