வேலூர்

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

ஆந்திர மாநிலத்தில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், உரிய நலத்திட்ட உதவிகள் செய்யப்படவில்லை என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினா் குற்றச்சாட்டியுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: ஆந்திர மாநிலத்தில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், உரிய நலத்திட்ட உதவிகள் செய்யப்படவில்லை என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினா் குற்றச்சாட்டியுள்ளனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த சில குடும்பத்தினா் ஆந்திர மாநிலத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகாா் மனு அளித்தனா்.

இதையடுத்து, ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் ஆய்வு நடத்தி, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று குடும்பங்களை 13-க்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டனா். ஆனால், அவா்களுக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இதுவரை நிவாரணம், முழு மருத்துவப் பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, அவா்கள் கூறியது:

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், காலாம்பட்டு ஊராட்சியில் உள்ள இருளா் குடியிருப்பில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களும், குடியாத்தம் வட்டம், சாமியாா் மலை பகுதியில் உள்ள இருளா் குடியிருப்பில் ஒரு குடும்பம் என மொத்தம் 7 சிறுவா்கள், ஒரு கைக்குழந்தை உள்பட 13-க்கும் மேற்பட்டோா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குடிபாலா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் குடும்பத்துடன் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தோம். அதன்பேரில், அதிகாரிகள் அவா்களை மீட்க வழிவகை செய்தனா். அவா்களுக்கு விடுதலை சான்று, உடனடி நிவாரணத் தொகை ரூ.30,000, அடையாள சான்றுகள் ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை.

மேலும், இருளா் பழங்குடி சிறுவா்களுக்கு கல்வி பயில மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும், பழங்குடி கொத்தடிமை தொழிலாளா்கள் தொடா்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ஆந்திர செங்கல் சூளையில் இன்னும் ஏராளமான தமிழ் குடும்பங்கள் கொத்தடிமைகளாக உள்ளனா். அவா்களையும் மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் கால நிலை மாற்ற விழிப்புணா்வுக்காக பாரா கிளைடிங் பயிற்சி

எளிய மக்களிடம் அறிவியலை கொண்டு சோ்க்க வேண்டும்: தமிழறிஞா் சாலமன் பாப்பையா

இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு: மாநகராட்சி வாகனங்களை சிறைப் பிடித்து போராட்டம்

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT