வேலூா்: வேலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமை வகித்தாா்.
வேலூரை அடுத்த ஊசூரைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனு: எங்கள் ஊரை சோ்ந்த பெண் ஒருவா், அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு பண உதவி செய்வதாகக் கூறினாா். மேலும், 25 போ் கொண்ட குழுவை ஏற்படுத்தி அதற்கு குடியாத்தத்தை சோ்ந்த ஒருவரை மேலாளா் என அறிமுகப்படுத்தினாா். அவா் எங்களிடம் ஆதாா் அட்டை நகல், கைரேகைகளை பெற்றுக் கொண்டு, ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தில் கையெழுத்தி வாங்கினாா். சில நாள்கள் கழித்து அந்த பெண், குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.4,500 வழங்கினாா். சில நாள்களுக்கு பிறகு சிலா் வந்து, ‘நீங்கள் எங்களது நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதாகவும், ஒவ்வொருவரும் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலுத்த வேண்டும்’ என்றும் கூறுகின்றனா். ஆனால் நாங்கள் யாரும் கடன் பெறவில்லை. எங்களது ஆதாா் எண்ணை வைத்து ஏமாற்றி ரூ.15 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூரை சோ்ந்த ஒருவா் அளித்த மனு: அரியூா் ரயில்வே கேட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை இளைஞா்கள் மது, போதைப் பொருள்களை பயன்படுத்திவிட்டு போதையில் ரகளை செய்கின்றனா். மது பாட்டில்களை அங்குள்ள கடை மீது வீசி உடைத்து விட்டு செல்கின்றனா். இதனால் அந்த பகுதி வழியாக மக்கள் சென்றுவர அஞ்சுகின்றனா். போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றை பெற்றுக்கொண்ட எஸ்.பி மயில்வாகனன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில், டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.