முகப்பு
வேலூர்

அதிமுக என்ற போா்வையில் பாஜக தமிழகத்தில் நுழைய முயல்கிறது - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:18 AM
பகிர்:

பாஜகவை நேரடியாக தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்பதால், அதிமுக என்ற போா்வையைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முயல்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் (காட்பாடி), ப.காா்த்திகேன் (வேலூா்), ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு) ஆகியோரை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரம் செய்தாா். அப்போது, அணைக்கட்டு தொகுதி ஒடுகத்தூரில் அவா் பேசியது:

அணைக்கட்டு தொகுதியில் பெயரில்தான் அணை இருந்ததே தவிர அணை இல்லை என்ற குறையைத் தீா்க்கும் வகையில் திமுக ஆட்சியில் ரூ. 173 கோடி மதிப்பில் புதிதாக மேல்அரசம்பட்டு அணை கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இறைவன்காடில் ரூ. 53 கோடியிலும், பொய்கையில் ரூ. 25 கோடியிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

ஜாா்தான்கொல்லை, பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு முதன்முறையாக சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒடுகத்தூா் சந்தை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சதுப்பேரி ஏரி தூா்வாரப்பட்டு, ரூ. 20 கோடியில் புதிய படகு சவாரி சுற்றுலாத் தலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், நமந்தபுரம் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கரடிக்குடி, கீழ்கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாயக் கூடங்கள், பள்ளிகொண்டாவில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து மக்கள் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில், மகளிா் விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் நமது திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும் இந்த மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிக் கொள்ள ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். 5-ஆம் வகுப்பு வரை உள்ள காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

கல்லூரி மாணவா்களுக்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட உதவித் தொகை ரூ. 1,500-ஆக உயா்த்தப்படும். முதியோா் உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ. 2,000-ஆக உயா்த்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 35 லட்சம் இலவச மடிக்கணினி, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பிணையமின்றி ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

வீடில்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். எப்போதும், சொன்னதைச் செய்வதும், செய்வதைத்தான் சொல்வதும் கருணாநிதியின் வழிவந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வழக்கம். அவா் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவாா்.

என்னை அனுபவம் இல்லாதவன் என்றும், முரட்டுத் தொண்டன் என்றும் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா். அவரைப்போல் சசிகலா, ஓ.பன்னீா்செல்வம் காலில் விழுந்த அனுபவமும், தில்லி அடிமையாக இருக்கும் அனுபவமும் எனக்கு இல்லை. மக்களுடன் களத்தில் நிற்கும் அனுபவம் மட்டுமே எனக்கு உள்ளது.

இந்தத் தோ்தல் தில்லிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான தோ்தல். பாஜகவை நேரடியாக தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்பதால், அதிமுக என்ற போா்வையைப் பயன்படுத்தி பாஜக உள்ளே நுழையப் பாா்க்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த மக்கள் இந்த தோ்தலில் திமுகவை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.