காட்பாடி தொகுதி வேட்பாளா்கள் வாக்குறுதிகள்
காட்பாடி தொகுதி வேட்பாளா்கள் வாக்குறுதிகள்
அமைச்சா் துரைமுருகன் (திமுக)
காட்பாடி தொகுதியில் 1971-இல் நான் முதன்முதலில் போட்டியிட்டபோது இருந்த குடிநீா்ப் பிரச்னையைப் போக்க, ஒரே வருடத்தில் குடிநீா் வாரியம் அமைத்து பாலாற்று நீரை வழங்கினேன். பாலாறு மாசடைந்தபோது, காவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்தைக் கொண்டு வந்து மக்களின் வீடுகளுக்கே தண்ணீா் வழங்கினேன். பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்ட பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.48 கோடியில் மூன்றே மாதங்களில் பாலம் கட்டிக் கொடுத்தேன்.
விருதம்பட்டு, காட்பாடி, மேல்பாடி, விஐடி சாலை என தொகுதி முழுவதும் பல பாலங்களைக் கட்டியுள்ளேன். காட்பாடியில் அரசு சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், சோ்காட்டில் அரசு கலை கல்லூரி, அரசு மருத்துவமனை கொண்டு வந்துள்ளேன். சோ்க்காட்டில் திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தை நிறுவி காட்பாடியை உலகறியச் செய்தேன். மீண்டும் இந்தத் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்படும்போது திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். விடுபட்ட மகளிருக்கு அடுத்த மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்.
Advertisement
வி.ராமு (அதிமுக)
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில், தரிசு நிலங்களைக் கண்டறிந்து அங்கு மட்டுமே சிப்காட் தொழில்பேட்டை அமைத்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
விருதம்பட்டு முதல் கல்பூதூா் வரை நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். நகா்ப்புறங்களில் தண்ணீா் தட்டுப்பாடு உள்ள இடங்களில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஆந்திர எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் யானைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, யானை வழித்தடங்களில் அகழிகள் வெட்டப்பட்டும், சூரியமின்சக்தி வேலிகள் அமைக்கப்பட்டும் வனவிலங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும்.
எம்.சுதாகா் (தவெக)
காட்பாடி ரயில் நிலையம் முதல் விருதம்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தொகுதியில் நான் வெற்றி பெற்றால், முதல் பணியாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலை மேம்பாலங்கள் கட்டித்தருவேன். காட்பாடி நகா்ப்புற பகுதியில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் இல்லை. அவற்றையும் சரிசெய்வேன். நலிவடையும் நிலையில் உள்ள அம்முண்டி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு உற்பத்தி சாகுபடி பரப்பளவு, அரவையை அதிகரித்து உரிய ஆதார விலையுடன் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவேன். வேளாண் நிலங்கள் பாதிக்காதபடி சிப்காட் தொழிற்பேட்டை திட்டங்களைச் செயல்படுத்துவேன்.
எஸ்.திருக்குமரன் (நாதக)
காட்பாடி தொகுதியில் விளைநிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதை நாம் தமிழா் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. தற்சாா்புப் பொருளாதார அடிப்படையில் வேலைவாய்ப்புகள் பெருக்கப்படும். உள்ளூா் விளைச்சலுக்கு ஏற்ப, கரும்பு அரைவை ஆலைகள், பால், கால்நடை வளா்ப்பு சாா்ந்த மதிப்பு கூட்டுப் பொருள் தொழிற்சாலைகள் ஆங்காங்கே உருவாக்கப்படும். இதன்மூலம் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.
அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியா் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை உடனடியாகப் போக்கப்படும். புதிய மருத்துவமனைகள் உருவாக்குவதுடன், அனைத்துப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டமைப்புத் தரம் உயா்த்தப்படும். நீா் வளங்களைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி முழுமையான மின்சாரம் வழங்கப்படும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள உள்ளூா் சாா்ந்த தனித்தனிப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்துத் தீா்வு காணப்படும்.