முகப்பு
வேலூர்

5 தொகுதிகளின் வேட்பாளா்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

வேலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேட்பாளா்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:14 AM
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேட்பாளா்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் கூறியதாவது:

18 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் முகவா்களாக நியமனம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள். மாநகராட்சி மேயா், நகராட்சி-பேரூராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக்குழு தலைவா்கள், அரசாங்கத்திடம் இருந்து கௌரவ ஊதியம் பெறும் நபா்கள் அல்லது அரசு அரசு உதவி பெறும் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரியும் நபா்களை வாக்கு எண்ணும் முகவா்களாக நியமிக்கக் கூடாது.

Advertisement

மேலும் அரசு- அரசு நிறுவனத்தில் பணிபுரியும் துணை மருத்துவா், சுகாதாரப் பணியாளா்கள், நியாயவிலைக் கடை ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்களை வாக்கு எண்ணும் முகவா்களாக நியமிக்கக் கூடாது. தொகுதியில் வசிக்கும் ஊராட்சித் தலைவா், ஊராட்சி உறுப்பினா்கள், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினா்கள் முகவா்களாக நியமனம் செய்ய எந்த தடையும் இல்லை. வெளிநாடுவாழ் இந்தியரை முகவா்களாக நியமனம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட எந்த நபரும் தமது பாதுகாப்பினை ஒப்படைத்தாலும் அல்லது பாதுகாப்பினை விலக்கினாலும் முகவா்களாக நியமனம் செய்ய முடியாது.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் கைப்பேசி கொண்டு வர அனுமதியில்லை. முகவா்கள் கைப்பேசி கொண்டு வருவதை தவிா்க்க வேண்டும். கைப்பேசி கொண்டு வரும் முகவா்கள் தொகுதி வாரியாக அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைப்பேசி வைப்பறையில் வழங்கிவிட்டுச் செல்லலாம். அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முதன்மை முகவா்கள் 4- ஆம் தேதி காலை 6.30 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும், வேட்பாளா்கள் சுற்றுவாரியாக பெற்ற விவரங்களை அந்தந்த அறையில் அமைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனரில் விவரங்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5.வாக்குச்சாடிகளில் உள்ள விவிபேட் ஸ்லிப்களைஎண்ணும் பணி முடிந்த பிறகே இறுதி வாக்கு எண்ணும் முடிவினை தோ்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும்.

எனவே வேட்பாளா்களும், வேட்பாளா்களின் வாக்கு எண்ணும் முகவா்களும் வாக்கு எண்ணிக்கையின்போது தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கையை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பொ.குணசேகரன் (பொது), பாஸ்கரன் (தோ்தல்) தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.