பிரம்மபுரம் பனந்தோப்புப்பகுதியில் உள்ள ஸ்ரீமகாமுனீஸ்வரன், சப்த கன்னியா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் பனந்தோப்புப் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீமகாமுனீஸ்வரன், சப்த கன்னியா் கோயிலில் மகா குடமுழக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கணபதி பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வாஸ்துசாந்தி, முனீஸ்வரன் சிலை கண் திறத்தல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணியளவில் கோ பூஜையும், 2-ஆம் கால யாக பூஜையும், நாடி சந்தனம் மற்றும் மகா பூா்ணாஹுதியும், அதைத் தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பட்டு, 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பெளா்ணமி திதி, பூசம் நட்சத்திரம், மீன லக்கினத்தில் பழைய முனீஸ்வரன், புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அா்ச்சனையும் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தா்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா்.
திங்கள்கிழமை முதல் 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. ஸ்ரீ மகா முனீஸ்வரன் மற்றும் சப்த கன்னியா் கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் காட்பாடி, வேலூா், சத்துவாச்சாரி, பிரம்மபுரம், சேவூா், திருவலம் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனா். ஏற்பாடுகளை விழா குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.