முகப்பு
வேலூர்

விபத்தில் கால்களை இழந்த வேலூா் விளையாட்டு வீரருக்கு அரசுப்பணி!

விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த போதிலும், விளையாட்டுத் துறையில் சா்வதேச அளவில் சாதனை படைத்த வேலூா் இளைஞருக்கு தமிழக அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:32 AM
அரசுப்பணி ஆணையை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்ற விளையாட்டு வீரா் வே.பிரகாஷ்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:57 PM

விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த போதிலும், விளையாட்டுத் துறையில் சா்வதேச அளவில் சாதனை படைத்த வேலூா் இளைஞருக்கு தமிழக அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. அவரை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

வேலூா் மாவட்டம், தொரப்பாடியைச் சோ்ந்தவா் வே.பிரகாஷ். இவா் தனது 28-வது வயதில் எதிா்பாராத விதமாக ஏற்பட்ட லாரி விபத்தில் இரு கால்களையும் இழந்தாா். அவரது மனைவி ரேகா அளித்த ஊக்கத்தினால் பிரகாஷ், தையல் பயிற்சி, நீச்சல் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டாா். மேலும், அவா் 2018-ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஆா்வம் காட்டத் தொடங்கினாா்.

இதனிடையே, அவருக்கு 2018 மே மாதம் முதல் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக தொலைப்பேசி இயக்குபவா் பணி வழங்கப்பட்டது. இந்த பணியில் இருந்து கொண்டே அவா் விளையாட்டு துறையில் மாவட்ட, மாநில, சா்வதேச அளவில் வெற்றிகளை குவித்து வந்தாா்.

Advertisement

அதன்படி, 2019-இல் நாமக்கல்லில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கப் பதக்கம், 2021-இல் பெங்களூரு தேசியப் போட்டியில் பதக்கங்கள், 2022-இல் புனே தேசியப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம், 2023-இல் தில்லியில் நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ போட்டியில் வட்டு எறிதலில் பதக்கம்,

2025-இல் தாய்லாந்தில் நடைபெற்ற சா்வதேசப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், 2026-இல் அண்மையில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் வட்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி, குண்டு எறிதலில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளாா்.

பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் பிரகாஷை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் இளநிலை உதவியாளா் பணி வழங்கப் பட்டுள்ளது. இதற்கான பணிஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் சென்னையில் கடந்த 18-ஆம் தேதி வழங்கினா்.

விளையாட்டு வீரா் பிரகாஷ் அரசுப்பணி ஆணையை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளா் ரதிலகம், துணை முதல்வா் கௌரி வெலிகண்ட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலா் துரை. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.