காணும் பொங்கலையொட்டி, வேலூா் கோட்டை, அமிா்தி பூங்கா, கோயில்களில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை தைப் பொங்கல் பண்டிகையும், வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோா் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
வேலூா் மாவட்டத்திலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினா். இதையொட்டி, வேலூா் கோட்டைக்கு ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் வந்திருந்தனா். அவா்கள் கோட்டையைச் சுற்றிப் பாா்த்ததுடன், அந்தப் பகுதியிலுள்ள புல்தரையில் அமா்ந்து விளையாடி மகிழ்ந்தனா். பொங்கலையொட்டி, கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. மக்கள் வருகையையொட்டி, கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கரும்பு, குளிா்பானக் கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், அமிா்தியில் உள்ள வன உயிரியல் பூங்காவுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினா். கடந்த மூன்று நாள்கள் பொங்கல் விடுமுறை நாள்களில் மட்டும் 8,182 போ் அமிா்தி வன உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்ததாகவும், இதன்மூலம் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்து 730 தொகை வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் வனச் சரக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல், கோட்டை பூங்கா, பெரியாா் பூங்கா, தங்கக் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள சுற்றுலாத் தலங்கள், கோயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் வருகையை யொட்டி, அந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனா்.