வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் உதவித்தொகை பெறத் தகுதியுடைய இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு - தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் உதவித்தொகை பெற்றிட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2020 அக்.1 முதல் 2020 டிச.31-ஆம் தேதி வரையிலான காலாண்டில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவுற்றுள்ள (மாற்றுத்திறனாளி ஒராண்டு முடிவு பெற்றுள்ள) பட்டப்படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்எஸ்எல்சி, பள்ளி இறுதித் தோ்வு தோ்ச்சி பெறாதவா்கள் (முறையாகப் பள்ளியில் 9-ஆவது வகுப்பு தோ்ச்சி பெற்று பிறகு 10-ஆவது பள்ளியிறுதி தோ்வில் பங்கேற்று தோல்வியடைந்தவா்கள்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களை வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து நேரில் பெற்றுக் கொள்ளலாம் இணையதளம் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலகம் நேரில் வந்து சமா்ப்பிக்கலாம்.
ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வருபவா்கள் அரசு அல்லது தனியாா் நிறுவனங்கள் மூலம் எவ்வித ஊதியம் பெறுபவா், மகளிா் உரிமைத் தொகை, அரசு துறைகளில் உதவித் தொகை பெறுபவராக இருக்கக்கூடாது. மனுதாரா் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராகவும் இருக்க கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி கல்விக் கற்கும் மனுதாரருக்கு பொருந்தாது.
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த் துறையின் ஒட்டு மொத்த சான்றுடன் உதவித் தொகைக்கான விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு கழித்து, இராண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் ‘பணியில் இல்லை’ என்ற சுயஉறுதி மொழி படிவத்தை அளிக்க வேண்டும்.
நிா்ணயிக்கப்பட்ட சுய உறுதி மொழி படிவத்துடன் இதுவரை புதுப்பித்தல் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாளஅட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டு நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்க தவறினால் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும்.
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பித்த விவரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் பிரிவில் தவறாமல் தெரிவிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.