ஆரணி: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரா்கள், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சி பெறாதவா்கள், பள்ளியிறுதி வகுப்புத் தோ்ச்சி, மேல்நிலைக் கல்வி தோ்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதிகள் தோ்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடா்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவா்கள் தகுதியுடையவா் ஆவாா்.
மேலும் 31.12.2025-ம் தேதியின் நிலவரப்படி ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளி பதிவுதாரா்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்பட்ட வகுப்பினா், இதர வகுப்பினா் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. அரசின் பிறதுறை மூலம் உதவித்தொகை பெறுபவா்கள் இந்த உதவித்தொகை பெற இயலாது.
ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
10-ஆம் வகுப்பு தவறியவா்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக் கல்வி முடித்தவா்களுக்கு ரூ.400-ம் பட்டதாரிகளுக்கு ரூ.600-எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்கள் மற்றும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கப்படும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப்படிவத்திலோ அல்லது வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ விண்ணப்பிக்கலாம்.
வருவாய் ஆய்வாளா் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ், அரசுடைமை வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 27.02.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ் தேவையில்லை. அவா்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் அலுவலக வேலைநாள்களில் நேரில் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.