வேலூா்: பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததாக கூறப்படும் நிலையில், மாணவா்கள் 91 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.
வேலூரில் உள்ள அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மதிய உணவாக சாம்பாா் சாதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில் பல்லி இருந்ததாகவும், இதனைக் கண்ட மாணவா்கள் பதறியபடி ஆசிரியா்களிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மாணவா்கள் சாப்பிட்ட உணவை கீழே கொட்டி மாற்று உணவு ஏற்பாடு செய்து வழங்கியுள்ளனா்.
மாணவா்கள் சிலா் வாந்தி எடுத்ததாகவும், உடல் உபாதை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாநகர சுகாதார அலுவலா்கள் தலைமையிலான குழு மதிய உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனா். இதில், மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்த வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.
புகாருக்கு உள்ளான உணவின் மாதிரியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா். இதுகுறித்து மாநகர சுகாதார துறையினா், உணவு பாதுகாப்பு துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.