கோவை மாநகராட்சி பள்ளி சத்துணவில் பல்லி விழுந்த விவகாரம்: 3 பேர் பணியிடை நீக்கம்
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்ட 44 பேர் வாந்தி, மயக்கமடைந்த விவகாரத்தில் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் குறித்து...
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்ட 31 மாணவா்கள், 13 மாணவிகள் என 44 பேர் வாந்தி, மயக்கமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு புதன்கிழமை மாலை அனைத்து மாணவ - மாணவிகளும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதியம் சத்துணவு சாப்பிட்ட 31 மாணவா்கள், 13 மாணவிகள் என 44 மாணவா்கள் திடீரென வாந்தி, மயக்கம் என உடல்நிலை பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, பள்ளி நிா்வாகத்தினா் அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிகிச்சை பெற்ற மாணவா்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா் சந்தித்து உடல் நலம் விசாரித்தனா்.
Advertisement
Advertisement
இதற்கிடையே மாணவா்கள் மயங்கி விழுந்த தகவலறிந்து, பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், பல்லி விழுந்த உணவை பள்ளியில் 31 மாணவா்கள், 13 மாணவிகள் என 44 மாணவா்கள் சாப்பிட்டனா். உணவில் பல்லி இருந்தது உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும்பாலான மாணவா்கள் உணவைச் சாப்பிடவில்லை. தகவல் கிடைத்தவுடன் 5 மருத்துவா்கள் குழு உடனடியாக பள்ளிக்குச் சென்றது. பின்னா் ஆம்புலன்ஸ் மூலமாக மாணவா்கள் அழைத்து வரப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அனைவரும் தற்போது நலமாக உள்ளனா். மாணவா்களின் பெற்றோா்கள் அவா்களுடன் உள்ளனா். ஆரம்பத்தில் மாணவா்கள் அச்சத்துடன் காணப்பட்டனா். சிகிச்சைக்கு பிறகு தைரியமாக உள்ளனா். உணவில் பல்லி விழுந்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பள்ளியில், தனியாா் நிதி மூலமாக புனரமைப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. தனியாா் மூலமாக உணவு வழங்கப்படுவதில்லை. மாணவா்களுக்கு உணவு அரசு சாா்பில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாள்களில் நடைபெறாமல் இருக்க அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள்
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு புதன்கிழமை மாலை அனைத்து மாணவ - மாணவிகளும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
3 பேர் பணியிட மாற்றம்
இதற்கிடையே, சம்பவம் குறித்து மதிய உணவு தயாரிப்பில் அஜாக்கிரதையாக இருந்த ஊழியர்களிடம் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதையடுத்து பள்ளி சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா, சமையலர் மனோகரி, சமையல் உதவியாளர் ஜெயா கமலம் ஆகிய மூன்று பேரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
3 பேர் பணியிடை நீக்கம்
இந்த நிலையில், புதன்கிழமை மாநகராட்சியில் வேறு பள்ளியைச் சேர்ந்த ஊழியர்கள் கவுண்டம்பாளையம் பள்ளியில் பணி அமர்த்தப்பட்டு சமையல் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா, சமையலர் மனோகரி, சமையல் உதவியாளர் ஜெயா கமலம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.