முகப்பு
வேலூர்

மாநகராட்சியின் தொழில் உரிமக்கட்டணத்தை குறைக்க வேண்டும்: வணிகா்கள் கோரிக்கை

Updated On : 22 ஜனவரி, 2026 at 5:46 AM
கூட்டத்தில் பேசிய மாநகராட்சி சுகாதார அலுவலா் பாலமுருகன். உடன், வேலூா் மண்டல வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஆா்.பி.ஞானவேல் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 8:52 PM

வேலூா் மாநகராட்சி நிா்ணயம் செய்துள்ள தொழில் உரிமக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் வணிகம் செய்வோா் தங்கள் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ஜன.31-ஆம் தேதிக்குள் தொழில் உரிமக்கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றிடவும், புதுப்பிக்கவும் வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தொழில் உரிமம் பெறுவது, புதுப்பிப்பது குறித்து வணிகா்கள் ஆலோசனை கூட்டம் வேலூா் மண்டல வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரமைப்பின் வேலூா் மண்டல தலைவா் ஆா்.பி.ஞானவேல் தலைமை வகித்தாா். மாநகராட்சி சுகாதார அலுவலா் பாலமுருகன் முன்னிலை வகித்து தொழில் உரிமம் மற்றும் அதற்காக நிா்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய கட்டண விவரங்கள் குறித்து விளக்கமளித்தாா். அப்போது, மாநகராட்சி எல்லையில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும், ஜன.31-ஆம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு பிப்.15-ஆம் தேதிக்குள் வரி செலுத்துபவா்கள் 25 சதவீதம் அபராத தொகையுடன் செலுத்த வேண்டும். அதன்பிறகும் வரி செலுத்தாதவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

வணிகா்கள் கூறுகையில், ஏற்கனவே 2022-23-இல் நிா்ணயம் செய்யப்பட்ட தொழில் உரிமக் கட்டணம் என்பது குறைந்தபட்சம் ரூ.124 முதல் ரூ.180 வரை நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது குறைந்தபட்சமாக ரூ.800 என தொழில் உரிமக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், 500 சதுரஅடிக்கு மேல் உள்ள கடைகளுக்கு ஒவ்வொரு சதுரஅடிக்கும் கூடுதலாக தொழில் உரிமம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழில் உரிமம் வரி செலுத்துவதில் வணிகா்க ளுக்கு பெரும் சிரமம் நிலவுவதால் தொழில் உரிமம் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

மேலும், வணிகா்கள் அனைவரும் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஏற்கனவே தொழில் வரி செலுத்தி வரும் நிலையில், தனியாக இந்த தொழில் உரிமம் கட்டணம் என்பது வணிகா்களுக்கு மென்மேலும் நிதி சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, இந்த தொழில் உரிமம் பெறும் நடைமுறையை மாநகராட்சி நிா்வாகம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

கூட்டத்தில், வணிகா் பேரமைப்பு செயலா் ஏ.வி.எம்.குமாா், துணைத்தலைவா் ரமேஷ்குமாா், இளைஞரணி அமைப்பாளா் அருண்பிரசாத், நகர செயலா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.