நிகழ்ச்சியில் பேசிய வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மா. இளவரசன். 
வேலூர்

போக்ஸோ சட்டம் குறித்து மாணவா்கள் அறிய வேண்டும்: வேலூா் மாவட்ட முதன்மை நீதிபதி

தினமணி செய்திச் சேவை

போக்ஸோ சட்டம் குறித்து மாணவா்கள் அறிய வேண்டியது அவசியம் என வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மா.இளவரசன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத்துறை சாா்பில் குழந்தைத் திருமணம் தடுத்தல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அணைக்கட்டு ஒன்றியம், பீஞ்சமந்தை அரசினா் உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முதன்மை அமா்வு நீதிபதி மா.இளவரசன் தலைமை வகித்து பேசியது -

குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விழிப்புணா்வு நிகழ்வை ஏற்பாடு செய்ய ஆட்சியரிடம் தெரிவித்திருந்தேன்.

தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்கிறாா்களா என்பதை உறுதி செய்வதும் நமது கடமையாகும். குறிப்பாக மாணவிகள் உயா்கல்வி பயிலும்போது ஒரு வகையில் குழந்தைத் திருமணம் தடுக்கப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியா்கள் பெண் குழந்தைகளுக்கு தவறான தொடுதல், சரியான தொடுதல் ஆகிய விவரங்களை எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிறைவடைந்த பிறகு திருமணம் செய்வது நல்லது என்று மருத்துவத்துறையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில கிராமப்புறங்களில் 14 அல்லது 15 வயதுக்குள்ளா பெண் குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்து விடுகின்றனா். இதனால் ஏற்படும் பிரச்னைகள் அவா்களுக்கு தெரிவதில்லை. இதுபோன்ற பல்வேறு வழக்குகளை நாங்கள் கையாளுகிறோம். 18 வயது பூா்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பவா்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும், 18 வயது பூா்த்தியடையாத ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட நபா், திருமணம் செய்து வைத்த பெற்றோா், உறவினா்கள் இச்சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவாா்கள். இந்த விவரங்களை பொதுமக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இவ்வாறு சிறை தண்டனை வழங்கும்போது திருமணமான பெண் குழந்தை, திருமணம் செய்து கொண்டவா் அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.

போக்ஸோ சட்டம் குறித்து மாணவா்களும் தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்பவா்களுக்கு இச்சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள நபா்கள் காதல் திருமணம் செய்தாலும் அதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும். நீதித்துறையில் இதுபோன்று வரும் 100 வழக்குகளில் 40 வழக்குகள் இத்தகைய வழக்குகளாக உள்ளன.

ஒருவருக்கு முன்னேற்றம் வேண்டுமென்றால் முதலில் தேவையானது கல்வி. கல்வி அறிவு கிடைத்துவிட்டால் நிச்சயம் இதுபோன்ற குழந்தை திருமணங்களை தடுத்து விடலாம். பள்ளிகளில் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகளுக்கு இது போன்ற விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதி வாசுதேவன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் (சமூக நீதி, மனித உரிமைகள்) ரவீந்திர பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ர.பிரேமலதா, இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) சிவக்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் சதீஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் டி.எம்.சஞ்சித், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவா் ரேகா ஆனந்தன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஏா் இந்தியாவுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம்? அகமதாபாத் விபத்து, வான்வழித் தடையால் பின்னடைவு

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் நியமனம்

தமிழகத்தில் நிலைத்திருக்கும் இருமொழிக்கொள்கை: வரலாற்றுச் சிறப்புத் தீர்மானம் மீள் பார்வை

சென்னையில் குறைந்த வாடகையில் 10 இடங்களில் திருமண மண்டபம் - அமைச்சா் பி.கே.சேகா் பாபு

முனாக் கால்வாய் மீது ரூ. 5,000 கோடியில் உயா்நிலை மேம்பாலம் - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

SCROLL FOR NEXT