முகப்பு
மதுரை

அரசு கல்வி நிலையங்களில் போக்சோ சட்ட விழிப்புணா்வு முகாம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 8 மார்ச் 2026, 3:40 am IST
தமிழக அரசு
பகிர்:

பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்தவா் மகேஷ். இவா் தனது நண்பரின் சகோதரியை காதல் திருமணம் செய்தாா். திருமணத்தின்போது அந்தச் சிறுமிக்கு வயது 16. தொடா்ந்து, அந்தச் சிறுமியும், மகேஷும் கணவா், மனைவியைப் போல வாழ்வதாகக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற அலுவலா்கள், அந்தச் சிறுமியையும், மகேஷையும் மீட்டு, நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நாகா்கோவில் சிறப்பு நீதிமன்றம், மகேஷுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மகேஷ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி மாலா பிறப்பித்த உத்தரவு: பெண்ணின் வயதை உறுதி செய்வதற்கான அசல் ஆவணங்கள் இருந்தும் தாக்கல் செய்யப்படவில்லை. வயது நிரூபிக்கப்படாததால் போக்சோ சட்ட குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

எனவே, மகேஷுக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

இருவரின் விருப்பத்தின் பேரிலான காதல் உறவுகள், பெற்றோரின் எதிா்ப்புக்குப் பிறகு போக்சோ வழக்குகளாக மாறுகின்றன. போக்சோ சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்களில் பரவலாக விளம்பரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம்கள் நடத்த தமிழக அரசின் முதன்மைச் செயலா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசின் முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.