முகப்பு
வேலூர்

எரிவாயு விநியோக பாதிப்பால் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் அபாயம்! தமிழ்நாடு ஹோட்டல்கள் உரிமையாளா் சங்கத் தலைவா்!!

வணிக எரிவாயு உருளைகள் விநியோகம் பாதிக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த இரு நாள்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எம்.வெங்கடசுப்பு தெரிவித்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:30 PM
எம். வெங்கடசுப்பு.
பகிர்:

வணிக எரிவாயு உருளைகள் விநியோகம் பாதிக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த இரு நாள்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எம்.வெங்கடசுப்பு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வேலூரில் செய்தியாளா்களிடம் கூறியது: ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்காக போரால் சா்வதேச அளவில் எண்ணெய், இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், அனைத்து நகரங்களிலும் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல நகரங்களில் சுத்தமாக உருவாயு உருளை விநியோகத்தை நிறுத்திவிட்டனா். ஒரு சில இடங்களில் ஓரிரு நாள்கள் விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. இதேநிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் அடுத்த இரு நாள்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும். எரிவாயு உருளை இல்லை என்றால் பெரிய உணவகங்கள் மட்டுமின்றி, சாதாரண தேநீா் கடை வரை அனைத்தும் பாதிக்கப் படக்கூடும்.

இதனால், உணவகங்களை நம்பி பணியாற்றும் சுமாா் 50 லட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாக மேலும் 50 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இதனிடையே, தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருள்கள் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தொடரும் பாதிப்புகளை தவிா்க்க மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் உணவகங்களுக்கு தேவையான எரிவாயு உருளைகளை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே பெரிய உணவகங்கள் அனைத்தும் தொழில்சாலைகள் சட்டத்தின்கீழ் தொழில்சாலைகளாக அங்கீகரித்திருந்தாலும், மத்திய அரசும், மாநில அரசும் தொழில்சாலைகளுக்கு அளிக்கும் சலுகைகளை உணவகங்களுக்கும் வழங்குவதில்லை. குறிப்பாக, மின்சார விநியோகத்தில் தொழில்சாலைக்குரிய சலுகை கிடைத்தால் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் குறையும். இதனால், பல உணவக ங்கள் உணவு சமையலில் மின்சாரத்தை பயன்படுத்த முன்வரக்கூடும்.

தவிர, தமிழகத்தில் ஹெச்.டி. மின்இணைப்பு தொழில்சாலைகள் தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரம் பெற அனுமதிக்கப்படுகிறது. ஆனால், உணவகங்களுக்கு எல்.டி. மின்இணைப்பு என்பதால் அந்த வாய்ப்பு இல்லை. தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உணவகங்களும் தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

முதல்கட்டமாக பலவகை உணவுகள் தயாரிப்பை குறைறக்கவும், இரண்டாவதாக உணவகங்கள் செயல்படும் நேரத்தை குறைறக்கவும் திட்டமிட்டுள்ளோம். எரிவாயு இல்லையென்றால் உணவகங்களை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →