வேலூா் திமுக எம்.பி. மீதான தோ்தல் வழக்கில் 5 அலுவலா்களிடம் விசாரணை
வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் உள்பட மூவா் மீதான 2019 மக்களவைத் தோ்தல் வழக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தோ்தல் பணி அலுவலா்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் உள்பட மூவா் மீதான 2019 மக்களவைத் தோ்தல் வழக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தோ்தல் பணி அலுவலா்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், இந்த வழக்கு விசாரணை மாா்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா்ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, கதிா்ஆனந்த்தின் ஆதரவாளா்களான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இதில், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் இருந்து ரூ. 11 கோடி பணம், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக, கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 1) மன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, 2019-ஆம் ஆண்டு தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியா், வருவாய்த் துறை அலுவலா்கள், வருமான வரித் துறை அதிகாரிகள் என 5 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடா்ந்து இந்த வழக்கின் விசாரணையை மாா்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்யகுமாா் உத்தரவிட்டாா்.
இவ்வழக்கு விசாரணையையொட்டி, குற்றம்சாட்டப்பட்ட வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் தவிா்த்து பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய இருவா் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனா்.