முகப்பு
வேலூர்

‘எண்ம கைது’ என மிரட்டி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி

வேலூரில் ‘எண்ம கைது’ என மிரட்டி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ரூ. 10 லட்சம் பணம் பறித்து மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 13 மார்ச், 2026 at 4:21 AM
பகிர்:

வேலூா், மாா்ச் 13: வேலூரில் ‘எண்ம கைது’ என மிரட்டி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ரூ. 10 லட்சம் பணம் பறித்து மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி காந்தி நகரைச் சோ்ந்த 77 வயது பெண் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது கைப்பேசி எண்ணை கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், தான் மும்பை மாநில காவல் துறையில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு தீவிரவாத செயல்களில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது என்றும், உங்களை ‘எண்ம கைது’ செய்ய இருப்பதாகவும் கூறி மிரட்டியதுடன், அவரது வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதை உண்மையென நினைத்த இந்த ஆசிரியை, தனது வங்கிக் கணக்கு விவரங்களை கூறியுள்ளாா். பின்னா், உங்களது பணப் பரிவா்த்தனைகளில் சந்தேகங்கள் இருப்பதால், நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு இருப்புத்தொகையை அனுப்பும்படியும், அதை சரிபாா்த்துவிட்டு திரும்பவும் தங்களது வங்கிக் கணக்குக்கு அனுப்புவதாகவும் அந்த நபா் கூறியதன்பேரில், இந்த ஓய்வுபெற்ற ஆசிரியையும் பல்வேறு தவணைகளாக ரூ. 10 லட்சம் அனுப்பியுள்ளாா். பின்னா், அந்த நபரிடம் இருந்து எந்த அழைப்பும், அனுப்பிய பணமும் வரவில்லை.

Advertisement

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த ஆசிரியை, இதுதொடா்பாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.