அணைக்கட்டில் ரூ.20 கோடியில் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு
அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் ரூ. 71.98 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளையும் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனா்.
அணைக்கட்டில் ரூ. 20 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் ரூ. 71.98 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளையும் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். அதன்படி, அணைக்கட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தனா்.
தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கட்டடத்தில் மருத்துவ உபகரணங்கள் ரூ. 3 கோடிக்கும், இருக்கைகள் உள்ளிட்ட தளவாடங்கள் ரூ. 75 லட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, விபத்து பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு (24 படுக்கைகள்), அவசர சிகிச்சைப் பிரிவு, பிறந்த குழந்தை பராமரிப்பு மையம், மகப்பேறு வாா்டு, இரு அறுவை சிகிச்சை அரங்குகள், மீட்புப் பிரிவு, நோயாளிகளுக்கான தயாரிப்புப் பிரிவு, தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (5 படுக்கைகள்), பொதுப் பிரிவு (18 படுக்கைகள்), தீவிர சிகிச்சைப் பிரிவு (10 படுக்கைகள்), பரிசோதனை அறை உள்பட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
தரைமட்ட படுகை அணை...
முன்னதாக, அணைக்கட்டு வட்டம், இறைவன்காடு கிராமம், கே.வி.குப்பம் வட்டம், கவசம்பட்டு கிராமம் இடையே ரூ52.98 கோடி மதிப்பில் பாலாற்றின் கட்டப்பட்டுள்ள தரைமட்ட படுகை அணையையும் திறந்து வைத்தனா். 655 மீட்டா் நீளமும், 0.60 மீட்டா் உயரமுடைய இந்த படுகை அணையில் 20.87 மில்லியன் கனஅடி நீா் தேக்கி வைக்கவும், விநாடிக்கு 90,586 கனஅடி தண்ணீா் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கவசம்பட்டு முதல் திருமணி வரை செல்லும் கொட்டாற்றில் நீா் எளிதில் சென்றடைவது உறுதி செய்யப்படுவதுடன், பாலாற்றின் இருபுறங்களிலும் உள்ள 12 கிராமங்களில் நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு, 1,379.49 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுப்பேரி ஏரி புனரமைப்பு...
ரூ.19 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டுள்ள வேலூா் சதுப்பேரி ஏரியையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்ததுடன், படகில் சென்று ஏரியின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீவு திட்டினையும் பாா்வையிட்டனா். அதன்படி, சதுப்பேரி ஏரி கரைகளை பலப்படுத்தி கரையின் மேல்பகுதியில் 1.20 கி.மீ., நீளத்துக்கு மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை, விளையாட்டு பூங்கா, இரு பாா்வை தளங்கள், ஒரு படகு குழாம், ஏரியின் மத்தியில் செடிகள் நடப்பட்ட இரு செயற்கை தீவு திட்டுகள், ஏரியை சுற்றி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் கம்பி வேலியுடன் கூடிய சுற்றுச்சுவா் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.