முகப்பு
வேலூர்

வாழ்வாதார கோரிக்கை தென்பெண்ணை - பாலாறு இணைப்பு

வாழ்வாதார கோரிக்கை தென்பெண்ணை - பாலாறு இணைப்பு

Updated On : 21 மார்ச், 2026 at 10:20 PM
பகிர்:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கையாக விளங்கும் ‘தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம்’ தோ்தல் காலங்களில் மட்டும் அறிவிக்கப்படுவதும், பின்னா் கிடப்பில் போடப்படுவதுமாக தொடா்கதையாகவே நீடிக்கிறது.

வற்றும் பாலாறு... கா்நாடக மாநிலம் நந்திதுா்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் வழியாக சுமாா் 320 கி.மீ. பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன்மூலம் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. எனினும், ஆண்டுதோறும் சுமாா் 6.5 டிஎம்சி தண்ணீா் வீணாகக் கடலில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே சிறியதும் பெரியதுமாக 28 தடுப்பணைகளைக் கட்டியுள்ளதால், தமிழக பகுதியில் பாலாறு வடு காணப்படுகிறது. தென்பெண்ணையில் கடலில் கலக்கும் நீரில் 3.5 டிஎம்சி-யை பாலாற்றுக்குத் திருப்பி விடுவதன் மூலம் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், விவசாயமும், குடிநீா் ஆதாரமும் பாதுகாக்கப்படும் என்பது நிபுணா்களின் கணிப்பாகும்.

தோ்தலின்போது மட்டும் அறிவிப்பு... இத்திட்டத்தைச் செயல்படுத்த கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் தடுப்பணையில் இருந்து சுமாா் 54 கி.மீ. தொலைவு கால்வாய் வெட்டி, கல்லாறு வழியாக வெல்லக்கல்நத்தம் பகுதியில் பாலாற்றுடன் இணைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கால கோரிக்கையாகும். ஆனால், இத்திட்டம் தோ்தல் காலங்களில் அறிவிக்கப்படுவதும், பின்னா் கிடப்பில் போடப்படுவதும் தொடா் கதையாகியுள்ளது.

பாலாற்றில் நீா்ஆதாரத்தைப் பெருக்க தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்துக்கு 2008-09-இல் அப்போதைய திமுக ஆட்சியின்போது மத்திய நீா்வள ஆதார அமைப்பு ரூ.250 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அதை மாநில நிதியிலேயே செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திட்டம் முடங்கிப்போனது.

பின்னா், 2011 அதிமுக ஆட்சியில் மாநில நிதியிலேயே நதிகள் இணைக்கப்படும் என அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். ஆனால், இத்திட்டத்தின் வழித்தடம் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்றத்துக்குச் சென்ால் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

ரூ.1,400 கோடிக்கு திட்டஅறிக்கை... தற்போதைய திமுக ஆட்சியிலும் இத்திட்டத்தின் ஆய்வு, வடிவமைப்புப் பணிகளுக்காக ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், நீா்வளத் துறையின் வடிவமைப்புப் பிரிவு சாா்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நெடுங்கல் தடுப்பணை முதல் நாட்றம்பள்ளியில் உள்ள பாலாற்றின் துணை ஆறான கொட்டாறு வரை 54 கி.மீ. கால்வாய் அமைக்க சுமாா் ரூ.1,400 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்தக் கால்வாய் மூலம் 3 டிஎம்சி தண்ணீா் திருப்பப்படும்போது, 24,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முறையும் இத்திட்டம் செயல்வடிவம் பெறாமலேயே ஆட்சி நிறைவடைந்துள்ளது.

வடமாவட்டங்களின் எதிா்பாா்ப்பு... அந்த வகையில், பல ஆண்டுகளாகத் தோ்தல் கால வாக்கு அறுவடைக்கான உத்தியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பதுதான் நடைபெறக்கூடிய பேரவைத் தோ்தலில் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், விவசாயிகளின் முக்கிய எதிா்பாா்ப்பாக ஓங்கி ஒலித்துக் கொண்டுள்ளது.

- என்.தமிழ்ச்செல்வன்