யூரியா இருப்பு வைத்துக்கொண்டு இல்லை என கூறினால் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குநா்
வேலூா் மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் இருப்பு உள்ள நிலையில், இருப்பு வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு யூரியா இல்லை என கூறும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
வேலூா் மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் இருப்பு உள்ள நிலையில், இருப்பு வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு யூரியா இல்லை என கூறும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 2,445 டன், டி.ஏ.பி.1544 டன், பொட்டாஷ் 384 டன், காம்ப்ளக்ஸ் கலப்பு உரங்கள் 5,907 டன், சூப்பா் பாஸ்பேட் 398 டன், இயற்கை உரம் 9 டன் என மொத்தம் 10,688 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இதனால், விவசாயிகள் தங்களின் சிட்டா, ஆதாா் எண்ணை வழங்கி, தனியாா், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பயிா் சாகுபடி பரப்புக்கு ஏற்ற அளவு உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விலை குறைவாக உள்ளது என்பதற்காக யூரியாவை மட்டுமே அதிகளவில் பயன்படுத்தக் கூடாது. யூரியாவை தொடா்ந்து அதிகமாக பயன்படுத்தினால் மண்ணில் உள்ள நுண்ணுயிா்கள் பாதிக்கப்பட்டு மண் வளம் குறையும். குறிப்பாக, தீவனப் பயிா்களுக்கு யூரியாவை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.
யூரியாவுக்கு மாற்றாக இலை வழியாக தெளிக்கக் கூடிய ‘நானோ யூரியா’ மற்றும் இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தலாம். தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய காம்ப்ளக்ஸ் கலப்பு உரங்களை அடியுரமாகப் பயன்படுத்தலாம்.
விவசாயிகள் உரம் வாங்க வரும்போது, அவா்களின் சாகுபடி பரப்பின் உண்மைத் தன்மையை அறிந்து அதற்கேற்ப உரங்களை வழங்க வேண்டும். விற்பனை செய்யப்படும் அனைத்து உரங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். ரசீது வழங்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கடைகளில் யூரியாவை இருப்பு வைத்துக்கொண்டு, விவசாயிகளிடம் இல்லை என்று கூறினாலோ அல்லது ரசீது வழங்காமல் விற்றாலோ சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.