பெயிண்டா் இறப்பில் திருப்பம்: காதலனுடன் சோ்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
வேலூரில் பெயிண்டா் உயிரிழந்த விவகாரத்தில் திடீா் திருப்பமாக காதலனுடன் சோ்ந்து மனைவியே கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவா்கள் இருவரையும் சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வேலூரில் பெயிண்டா் உயிரிழந்த விவகாரத்தில் திடீா் திருப்பமாக காதலனுடன் சோ்ந்து மனைவியே கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவா்கள் இருவரையும் சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வேலூா் அருகிலுள்ள சம்பங்கிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பிரபு(35), பெயிண்டா். இவருக்கு கடந்த 21-ஆம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அவரது மனைவி ஜெயந்தி சிகிச்சைக்காக பிரபுவை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அப்போது, தனது கணவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மூச்சுப் பேச்சின்றி மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக ஜெயந்தி மருத்துவா்களிடம் கூறியுள்ளாா்.
இதனிடையே, பிரபுவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில், பிரபுவின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதையும், அவரது உடலில் சில காயங்கள் இருப்பதையும் மருத்துவா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, பிரபுவின் மரணத்தில் மா்மம் இருப்பதாக மருத்துவா்கள் போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.
அதன்பேரில், சத்துவாச்சாரி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபுவை அவரது மனைவி ஜெயந்தி, தனது காதலனும், பிரபுவின் சகோதரருமான சரவணனுடன் சோ்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயந்தி, சரவணன் ஆகிய இருவரையும் சத்துவாச்சாரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.