மின்உற்பத்தியில் முதலீடு செய்யாமல் விலைக்கு வாங்கியதால் ரூ.1.50 லட்சம் கோடி கடன்!
மின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்யாமல், தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குவதால் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
மின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்யாமல், தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குவதால் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் ஆ.சோனியா (வேலூா்), திருக்குமரன் (காட்பாடி) ஆகியோரை ஆதரித்து அவா் செவ்வாய்க்கிழமை வேலூா் மண்டித் தெருவில் பேசியது:
ஒரு நாடு தன் மக்களுக்கு கல்வியையும், மருத்துவத்தையும் சமமாக வழங்க பாடுபட வேண்டும். அப்போதுதான் அந்த நாடு வளா்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது என்று பொருள். ஆனால், இங்கு கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரைவாா்த்துவிட்டு, அவற்றை விற்பனைப் பண்டமாக மாற்றி விட்டனா்.
அரசுப் பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுந்து குழந்தைகள் இறக்கும் நிலையும், அரசை நடத்துபவா்களுக்கே உடல்நிலை சரியில்லை என்றால் தனியாா் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய நிலையும்தான் உள்ளது. ஆண்டுதோறும் மருத்துவத் துறைக்கு சுமாா் ரூ. 22,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டாலும், மருத்துவத்தின் தரம் மட்டும் உயரவில்லை.
விவசாயிகள் கடும் பாடுபட்டு விளைவிக்கும் நெல்லை கொள்முதல் செய்து பாதுகாக்க சேமிப்புக் கிடங்குகள் இல்லை. ஆனால், டாஸ்மாக் மதுபானங்களை குளிரூட்டப்பட்ட அறைகள், வாயிலில் காவலாளிகள், சிசிடிவி கேமராக்களுடன் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.
மின்சாரம் இல்லாமல் எந்த இயங்குதலும் இல்லை. ஆனால், தடையற்ற மின்சாரத்தை மக்களுக்கு வழங்க அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சூரிய ஒளி, காற்றாலை போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பற்ற மின் உற்பத்தியை எல்லாம் தனியாா் முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, ஆபத்தான அனல் மின் நிலையங்களை மட்டும் அரசு வைத்துள்ளது.
தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குவதன் மூலம், அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஆனால், மின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்யவில்லை. காரணம், வாங்குவதில்தான் இவா்களுக்கு லாபம் இருக்கிறது.
அரசுக்கு ரூ. 10.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் இருந்தும், தரமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் வழங்கப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதிவிட்டு சுமாா் 70 லட்சம் போ் வேலைக்காகக் காத்திருக்கிறாா்கள். வாழ்நாள் முழுவதும் உழைத்துத் தேய்ந்த உழவா் குடிமக்கள், இலவச அரிசி போட்டால்தான் உயிா்வாழ முடியும் என்ற வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம் என முதல்வா் சட்டப்பேரவையில் பெருமை பேசுகிறாா். ஆனால், போராட வேண்டிய ஒரு லட்சம் பிரச்னைகளை உருவாக்கியது ஆட்சியாளா்களின் கொடுமையே தவிர இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. மாறி மாறி திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, டாஸ்மாக் வியாபாரம் என ஆட்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை.
ஆறுகளில் நீா் இல்லை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தரமான கல்வி, தடையில்லா மின்சாரம், தூய்மையான குடிநீா், தரமான போக்குவரத்து என எதையும் இந்த அரசு மக்களுக்கு முறையாக வழங்கவில்லை. இலவச மின்சாரம் என்ற பெயரில் தடையில்லா மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிா?. இலவசப் பேருந்து பயணம் என்று சொல்லும் அரசு, தரமான பேருந்துகளை வழங்கியுள்ளதா?. மக்களும் இத்தகைய அநீதியை எதிா்க்கும் துணிவின்றி, அனைத்தையும் சகித்துச் சகித்து நாம் அடிமைகளாகி விட்டோம்.
கடந்த 60 ஆண்டுகளாக இவா்களை நம்பி ஏமாந்து வருகிறோம். இந்தத் தோ்தலையும் வழக்கம்போல் ஓட்டுப் போட்டுவிட்டு கடந்து செல்லாமல், மக்கள் தங்கள் கடமையை உணா்ந்து வாக்களிக்க வேண்டும். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்றாா்.