தேவையில்லாத பயம்!
மத்திய அமைச்சரவை 2020 ஏப்ரல் மாதம், கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றுக் காலத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்பு-3 (பிரஸ் நோட்-3) என்கிற அரசாணையில் மாற்றம் ஏற்படுத்துவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் எல்லையை ஒட்டிய நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கான தடையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்திய எல்லையை ஒட்டிய நாடுகள் என்றாலும்கூட, "பத்திரிகைக் குறிப்பு-3' என்பது சீனாவைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை என்பது வெளிப்படை. கொவைட் 19 கொள்ளைநோய்த் தொற்று காலத்தில் இந்திய நிறுவனங்களைத் தனது முதலீடுகள் மூலம் சீனா கைப்பற்றக்கூடும் என்கிற அச்சத்தின் வெளிப்பாடுதான் அந்த அரசாணை.
இப்போதைய முடிவுப்படி, இந்திய எல்லையை ஒட்டிய நாடுகளில் இருந்து 10 % வரை அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கட்டமைப்பு, இயந்திரங்கள் உள்ளிட்ட மூலதனப் பொருள்கள், மின்னணு உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் 60 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உயர சீனா ஒருபோதும் உதவ முன்வராது என்பது உண்மை. ஆனால், உலகின் உற்பத்தி மையமாகவும், இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் இருக்கும் சீனாவை அகற்றி நிறுத்திவிட்டு, இந்தியா பொருளாதார வல்லரசாக முடியாது. அரிய கனிமங்கள் (ரேர் மினரல்ஸ்) மட்டுமல்லாமல், மின்னணு உற்பத்தியிலும் அதீத தொழில்நுட்பம் தெரிந்த தொழிலாளர்களைக் கொண்ட நாடாக சீனா உயர்ந்திருக்கிறது.
புதிய தொழில்நுட்பங்கள், சர்வதேச விநியோகச் சங்கிலியில் இணைதல், உற்பத்திக்கான மூலதனப் பொருள்களைப் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு நாம் இனிமேலும் அமெரிக்காவையோ, மேலை நாடுகளையோ மட்டுமே நம்பி இருக்க முடியாத சூழலை அதிபர் டிரம்ப்பின் அணுகுமுறை உருவாக்கி இருக்கிறது. இந்தப் பின்னணியில் சீனாவுடன் வர்த்தக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சமரசம் செய்துகொள்வதன் மூலம் மட்டும்தான், அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து இந்தியா சிந்திக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடும் கணிசமாகக் குறைந்துவரும் நிலையில், சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அந்நிய முதலீடுகளை நுணுக்கமாக ஆய்வு செய்து அனுமதி வழங்குவது என்பது இயலாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சீன முதலீடு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள சிங்கப்பூர், கொரியா, ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் மூலம் செய்யப்பட்டால், அதை நாம் தடுத்துவிடவா முடியும்? சீன முதலீடு குறித்து கவலைப்படுவது அர்த்தமற்றது.
இந்தியாவின் பாதுகாப்பையும், இந்தியாவின் வர்த்தகத்தையும் பாதிக்காத அளவில் எந்தெந்தத் துறைகளில் சீனா உள்ளிட்ட நாடுகளின் முதலீடுகளை அனுமதிக்கலாம் என்பதை நாம் யோசித்துச் செயல்பட வேண்டுமே தவிர, அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுதல் புத்திசாலித்தனமாகாது. சில துறைகளைத் தவிர ஏனைய துறைகளில் தாராளமாக அந்நிய நேரடி முதலீடுகளைத் தடையின்றி அனுமதிப்பதன் மூலம் மட்டுமே நமது உற்பத்தியையும், ஏற்றுமதியையும், உள்நாட்டு வேலைவாய்ப்பையும் அதிகரிக்க முடியும்.
வங்கிகள் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்களில் சீன முதலீடு குறித்த அச்சத்தில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், மின்னணு உபகரணங்கள் தயாரிப்பில் சீன முதலீடு என்பது, தொழில்நுட்ப ரீதியாகவும் பயனளிப்பதாக இருக்கும். அந்த வாய்ப்புகளை இந்தியா நழுவ விட்டிருக்கிறது.
"கிரேட் வால் மோட்டார்ஸ்' என்கிற சீன மோட்டார் வாகன நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீட்டுடன் இந்தியாவில் தயாரிப்பை மேற்கொள்ள விரும்பியது. உலகில் மிகப் பெரிய மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமும், மோட்டார் வாகனத்துக்கான மின்கலன் தயாரிப்பு நிறுவனமுமான "பிஒய்டி 4' நிறுவனமும் இந்தியாவில் இயங்க விழைந்தது. இந்தியாவைத் தவிர வேறு எந்தவொரு நாடாக இருந்தாலும் அவற்றை மேளதாளத்துடன் வரவேற்றிருக்கும்.
2023-24 பொருளாதார ஆய்வு அறிக்கையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் குறிப்பு இது-" சீனாவுடன் நமது வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் அதிகரித்து வருகிறது. சீன நிறுவனங்களை இந்தியாவில் தயாரிக்க அனுமதிப்பதன் மூலம் மட்டும்தான் நம்மால் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும். இல்லாவிட்டால், சீனாவுக்கு நாம் பொருளாதார ரீதியாகக் கடன்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம்!''
சீன முதலீடுகள் அதிகரித்து, அவர்களது நிறுவனங்கள் இங்கே செயல்பட அனுமதிப்பதன் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது தவறான கருத்து. அதன் காரணமாக, சீன அச்சுறுத்தல் குறையும் என்பதுதான் உண்மை. முதலீடுகளுக்கு கதவைத் திறந்துவிடாமல், வளர்ச்சி சாத்தியமல்ல.
முதலீட்டை ஈர்க்கலாம்; கடன் வலையில்தான் விழக் கூடாது.