முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு
முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு
நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஏப்ரல்-டிசம்பா்), இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 18 சதவீதம் அதிகரித்து, 4,787 கோடி டாலரை எட்டியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து வந்த முதலீடு முந்தைய 2024-25 நிதியாண்டில் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்து, 780 கோடி டாலராக உள்ளது.
ஒட்டுமொத்த முதலீட்டில் 1,765 கோடி டாலருடன் சிங்கப்பூா் முதலிடத்திலும்; அமெரிக்கா, மோரீஷஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
துறைவாரியாக, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் அதிகபட்சமாக 1,070 கோடி டாலரும், சேவைத் துறையில் 842 கோடி டாலரும், வா்த்தகத் துறையில் 336 கோடி டாலரும் முதலீடு கிடைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்புத் துறைகளிலும் முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
மாநில அளவில், அந்நிய முதலீட்டை ஈா்ப்பதில் மகாராஷ்டிரம் 1,538 கோடி டாலருடன் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தொடா்ந்து, கா்நாடகம் (1,120 கோடி டாலா்), குஜராத் (500 கோடி டாலா்), தமிழகம் (389 கோடி டாலா்), ஹரியாணா (384 கோடி டாலா்) ஆகிய மாநிலங்களில் முதல் 5 இடங்களில் உள்ளன.