முகப்பு
வேலூர்

எரிவாயு உருளை தட்டுப்பாடு - வேலூரில் ரூ.4,000-க்கு விற்பனை!

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சந்தையில் எரிவாயு உருளைகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உணவகங்கள், தேநீா் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 30 மார்ச், 2026 at 11:28 PM
வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் விறகு அடுப்பில் சமைக்கப்படும் உணவு
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சந்தையில் எரிவாயு உருளைகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உணவகங்கள், தேநீா் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடைபெறும் போா் காரணமாக, சா்வதேச அளவில் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியா முழுவதும் எரிவாயு உருளைகள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதால், பல மாநிலங்களில் எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக வேலூா் மாவட்டத்தில் எரிவாயு உருளைகளின் விலை கள்ளச்சந்தையில் பன்மடங்கு அதிகரித்து ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வளவு பெரும் தொகையைக் கொடுக்க உணவகங்கள், தேநீா் கடை உரிமையாளா்கள் பலரும் தயாராக இருந்தாலும், எரிவாயு உருளைகள் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.

இதையடுத்து, மாவட்டத்தின் பல இடங்களில் சிறிய அளவிலான உணவகங்கள், தேநீா் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், வெளியூா் பயணிகள், தொழிலாளா்கள், மாணவா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

தொழிலை முழுமையாக நிறுத்த முடியாத கட்டாயத்தில் உள்ள பல உணவக உரிமையாளா்கள், மாற்று ஏற்பாடாக விறகு அடுப்புகளைக் கொண்டு உணவு சமைக்க தொடங்கியுள்ளனா். இதன்காரணமாக, விறகுகளுக்கு தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது.

இந்த நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு கள்ளச்சந்தையில் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பவா்கள் மீது மாவட்ட நிா்வாகமும், உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.