கோயம்புத்தூர்

முதுமலையில் மல்லுக்கட்டிய "ஆண்டாள்'

உதகை, ஜூன் 11: உதகை முதுமலை சரணாலயத்தில் இருந்து சேலம் உயிரியல் பூங்காவுக்கு மதுரை கோயில் யானையை கொண்டு செல்வதற்காக பகீரத பிரயத்தனம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை கள்ளழகர் கோயிலைச் சேர்ந்த ஆண்

ஏ. பேட்ரிக்

உதகை, ஜூன் 11: உதகை முதுமலை சரணாலயத்தில் இருந்து சேலம் உயிரியல் பூங்காவுக்கு மதுரை கோயில் யானையை கொண்டு செல்வதற்காக பகீரத பிரயத்தனம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை கள்ளழகர் கோயிலைச் சேர்ந்த ஆண்டாள் எனும் பெண் யானைக்கு 35 வயது என கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இந்த யானை மிகவும் வயதான தோற்றத்தில் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்றெண்ணி கடந்த 4 மாதத்துக்கு முன் இயற்கை சிகிச்சைக்காக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கையில் ஆண்டாளுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து பாம்பேக்ஸ் எனும் முகாமில் ஆண்டாளை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் எனும் அமைப்பின் நிர்வாக அறங்காவலரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மனுவில், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த யானை வனப்பகுதிக்குள் இருப்பதால் மற்ற விலங்குகளுக்கும், முதுமலை வனப்பகுதி சரணாலயத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான யானைகளுக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்படும். எனவே, அந்த யானையை அப்பகுதியிலிருந்து வேறு இடத்துக்கு சிகிச்சைக்காக வெளியேற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மோகன்ராம், துரைசாமி ஆகியோரடங்கிய பெஞ்ச் ஏப்ரல் 18-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஆண்டாள் எனும் யானையை சேலம் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்கான போக்குவரத்து செலவை வழக்கறிஞர் ராஜேந்திரனே ஏற்க வேண்டும் எனவும் எனக் கூறப்பட்டது.

அதன்பேரில், வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை 4 மணிக்கு ஆண்டாளை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதற்காக லாரி வரவழைக்கப்பட்டது.

அப்போது லாரி அருகே வந்த ஆண்டாள் யானை லாரியில் ஏற மறுத்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் லாரியில் ஏற மறுத்ததால் அங்கு கும்கி யானைகளான சந்தோஷ், வாசிம் ஆகியன வரவழைக்கப்பட்டன.

4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கும்கிகளின் பெரும் முயற்சியால் லாரியில் இரவு 8 மணிக்கு ஆண்டாள் யானை ஏற்றப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக யானையின் தலைப்பகுதி லாரிக்கு வெளியே வருமாறு ஏற்றப்பட்டுவிட்டது. இதனால் லாரியை எடுக்க முடியவில்லை. செல்லும் வழியில் யானை இறங்கிவிடும் வாய்ப்புள்ளதால் யானையை திரும்பி நிற்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஏற்பட்ட ஆண்டாளின் பிளிறல் சத்தத்தால் காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியில் கூடிவிட்டது. இதையடுத்து ஆண்டாளை லாரியில் சரியாக நிற்க வைக்கும் முயற்சி ஒருபுறமும், கும்கி யானைகளைக் கொண்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி ஒருபுறமும் நடைபெற்றது.

இந்நிலையில் இரவாகிவிட்டதால் இந்தஇரு பணியையும் முடிக்க முடியாமல் வனத்துறையினர் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அப்போது முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீ வத்சவா, யானை ராஜேந்திரன், இந்திய விலங்குகள் நலச்சங்க தலைவர் நைஜில், வனத்துறை கால்நடை மருத்துவர் கலைவாணன் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறுகையில், ஆண்டாள் யானையைத் தவிர தமிழகத்தில் மேலும் 12 யானைகள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 3 யானைகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிலும், மற்ற 9 யானைகள் தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் உள்ளன. இவற்றை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். இதற்கான செலவை இந்து அறநிலையத்துறையினரும், வனத்துறையினரும் ஏற்க வேண்டும்.

ஆண்டாளுக்கு சிகிச்சையளிக்க இங்கிலாந்திலிருந்து 4 பேர் கொண்ட மருத்துவர் குழு சேலம் வந்துள்ளது.

இனிமேல் முதுமலை சரணாலய பகுதியில் நோய்வாய்ப்பட்ட யானைகளை கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. ஏனெனில், யானையின் நோய் மனிதருக்கும் பரவ வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற செயலுக்கு அனுமதி வழங்குவதைத் தடை விதிக்க வேண்டும் என மீண்டும் நீதிமன்றத்தை நாடுவேன் என்றார்.

லாரியில் யானையைத் திரும்பி நிற்க வைக்க இரவு 10 மணிக்கு மேலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லாரியில் ஆண்டாளை ஏற்றியபின்னர் அது சேலத்துக்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT