கோயம்புத்தூர்

கருப்பை கட்டி: கை கொடுக்குமா காப்பீட்டுத் திட்டம்?

ஈரோடு, நவ.19:  கருப்பை கட்டிக்கான அறுவைச்சிகிச்சைக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டம் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் ஏழைப் பெண்கள்.   ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பத்தி

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு, நவ.19:  கருப்பை கட்டிக்கான அறுவைச்சிகிச்சைக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டம் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் ஏழைப் பெண்கள்.

  ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி வழங்குகிறது முதல்வர் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டம் மூலம் 51 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு நடப்பாண்டில் ரூ.517 கோடி பிரீமியம் செலுத்தியுள்ளது.

  இத்திட்டம் மூலம் சுமார் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புற்றுநோய், இதயநோய் உள்ளிட்டவற்றுக்கு இத்திட்டம் மூலம் அறுவைச்சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் உடல் மற்றும் மனதளவில் பெரும்பாலான நடுத்தர வயதுப் பெண்களை வாட்டிவதைக்கும் கருப்பைக் கட்டியை அகற்றுவதற்கான அறுவைச்சிகிச்சைக்கு இந்த திட்டம் உதவாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  35 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு கருப்பையில் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் கருப்பையில் சிறிய கட்டிகள் உருவாகிறது. உரிய நேரத்தில் இந்தக் கட்டிகள் அகற்றப்படாதபட்சத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

  தமிழகத்தில் பொதுவாக 35 வயதுக்கு மேல் 45 வயதுக்கு இடைப்பட்ட 28 சத பெண்கள் கருப்பைக் கட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 சத பெண்கள் உரிய காலத்தில் அறுவைச்சிகிச்சை செய்து கொள்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் வசதியில்லாத சிலர் அறுவைச்சிகிச்சை செய்து கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு 50 வயதுக்குமேல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   தமிழகத்தில் தற்போது 3 சத பெண்கள் கருப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கருப்பையை அகற்றுவதற்கான அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மருத்துவச் செலவு ஏற்படுகிறது. இதனால் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர்.

  இது குறித்து திமுக பிரமுகர் ஒருவர் கூறியது:

  ரேஷன் அரிசி வாங்கி சாப்பிடுபவர்கள், எப்படி ரூ.30 ஆயிரம் செலவு செய்து இந்த அறுவைச்சிகிச்சையை செய்து கொள்ள முடியும்?. இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தனியார் மருத்துவமனைக்குக் கொடுக்கும் தொகையில் பாதியை கொடுத்தால்தான் அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை செய்கின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால் தவித்துக் கொண்டிருக்கும் ஏழைப் பெண்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் உதவ வேண்டும் என்றார்.

  அரசுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த உயர் அதிகாரி கூறியது;

  முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் 51 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் கருப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். இந் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மருத்துவ உதவிகேட்டு வருகின்றனர் என்றார்.

  கருப்பையில் ஏற்படும் சாதாரணக் கட்டியை கவனிக்காமல் விடும்போதுதான் அது புற்றுநோயாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். ஆரம்ப நிலையிலேயே அறுவைச்சிகிச்சை செய்து கொள்வதற்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டம் உதவும் பட்சத்தில், கருப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

ஏடிஎம் காா்டை திருடி பணம் எடுத்தவா் கைது

கட்டுமானப் பணிகளின்போது விதிகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

ஐயப்ப பக்தா்கள் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT