ஈரோடு, ஜன. 8: அரசு அளிக்கும் உதவித்தொகை 2 மாதப் பராமரிப்புக்கு கூட போதுமானதாக இல்லாததால், முதியோர் இல்லங்கள் நிதிப் பற்றாக்குறையால் தடுமாறி வருகின்றன.
60 வயது நிறைவடைந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை, இருப்பிடம், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதியோர் இல்லங்கள் நடத்திவரும் சேவை அமைப்புகளுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 லட்சம் வழங்குகிறது. இந்த நிதி உதவியோடு முதியோர் இல்லம் நடத்தும் சேவை அமைப்பின் ரூ.40 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.2.40 லட்சம் நிதியைக் கொண்டு ஆண்டுதோறும் 40 முதியோர்களை "அன்போடு' பராமரித்து வரவேண்டும் என்பது அரசு விதி. இந்த நிபந்தனையை ஏற்றுதான் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு உதவிபெறும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
ரூ.2.40 லட்சம் நிதியை 40 முதியோர்களுக்கு பகிர்ந்து அளிக்கும்போது ஒவ்வொருக்கும் மாதம் ரூ.500 மட்டுமே கிடைக்கும். இந்தத் தொகையைக் கொண்டு முதியோரை எப்படி சிறப்பாகப் பராமரிக்க முடியும். அரசு உதவி அளிக்கும் முதியோர் இல்லங்களின் நிர்வாகிகள் உதவி கேட்டு வெளியில் சென்றாலும், உதவும் மனம் படைத்தவர்கள் கூட அரசு உதவியை காரணம் காட்டி உதவ மறுத்துவிடுகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் 40 முதியோரைப் பராமரிக்க கண்டிப்பாக மாதம் ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்துவரும் இத்தகைய முதியோர் இல்லங்களுக்கு, அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்குகிறது. இதனால் இத்தகைய முதியோர் இல்லங்கள் நிதி தேவைக்காக நாள்தோறும் உதவி செய்பவர்களை தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உதவித் தொகை பெறும் இல்லங்களில் பராமரிக்கப்படும் முதியோருக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ரூ.400 உதவித்தொகையும் வழங்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்துவிட்டது. இந்த உதவித்தொகை மட்டுமாவது வழங்க அரசு முன்வரும் பட்சத்தில் இத்தகைய இல்லங்களில் உள்ள முதியோரைப் பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அரசு உதவிபெறும் முதியோர் இல்ல நிர்வாகி.
உழைத்து ஓய்ந்துவிட்ட நிலையில், இனிமேல் இவர்களால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குடும்ப உறவுகளால் ஒதுக்கிவைக்கப்பட்ட முதியவர்கள் அடைக்கலம் தேடித்தான் முதியோர் இல்லத்துக்குச் செல்கின்றனர். உழைப்பதற்கு உரிய உடல் திறன் உள்ளவர்களுக்குக் கூட அரசு பல இலவசங்களை வழங்குகிறது.
ஆனால் உழைக்க உடலில் வலு இல்லாமல் வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதியோருக்கு, இவர்கள் வாழப்போகும் சிறிதுகாலம் வரையாவது நல்ல உணவும் உடையும் வழங்க முதல்வர் கருணாநிதி மனது வைக்க வேண்டும் என்பதே முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.