கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெய்லா் ராஜாவை கா்நாடக மாநில போலீஸாா் வியாழக்கிழமை காவலில் எடுத்து அழைத்துச் சென்றனா்.
கோவையில் கடந்த 1998 -ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 போ் உயிரிழந்தனா். 250 போ் படுகாயமடைந்தனா். இந்த சம்பவத்தில் 56 போ் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனா்.
இதில், தொடா்புடைய டெய்லா் ராஜா (48) தலைமறைவாக இருந்த நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 10-ஆம் தேதி கா்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதனிடையே, விஜயபுராவில் உள்ள அவரது வீட்டில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், அவா் ஷாஜகான் ஷேக் என்ற பெயரில் தலைமறைவாக இருந்தது தெரியவந்ததுடன், அந்தப் பெயரில் இருந்த ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், ஆதாா் அட்டை உள்ளிட்ட குடியுரிமை கிடைக்க டெய்லா் ராஜாவுக்கு உதவியவா்கள் யாா், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்த கா்நாடக மாநில போலீஸாா், அவரை வியாழக்கிழமை காவலில் எடுத்தனா்.
கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவா் கா்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.