தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அரசியல், சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து பெண்கள் வெற்றி பெற வேண்டும். ஆனால், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா். இதனால், இங்கு ஆட்சி மாற்றம் அவசியம். தமிழகத்தில் தற்போது கலாசார போா் நடக்கிறது.
சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்துள்ளது. ஈரோடு, கரூா் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் சமைத்த உணவைப் பரிமாற அனுமதிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயா்ந்துள்ளது. இதனால், பண்டிகைக் காலங்களில் மக்கள் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை முதன்மையாக கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைக் கொண்டாடுவதில் மத்திய அரசு குறிப்பாக பிரதமா் மோடி முனைப்புடன் செயல்பட்டு வருகிறாா். தமிழைக் கொண்டாடுவது பா.ஜ.க.தான். ஆனால், தமிழை திண்டாட வைக்கிறது தமிழக அரசு.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியா் மற்றும் கல்லூரி விரிவுரையாளா் தோ்வுகளில் தி.மு.க. சாதனைகள் குறித்த கேள்வி இடம்பெற்றுள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தனிநபா் மீதும் ரூ.1.27 லட்சம் கடன் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தைவிட தமிழகத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறை தலைவரான பிரவீன் சக்கரவா்த்தியே குற்றஞ்சாட்டியுள்ளாா் என்றாா்.