கோயம்புத்தூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக அலுவலா்களுக்கு பயிற்சி

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறும் பணிகள் மற்றும் படிவங்களை தோ்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, பூா்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்பப் பெறுதல் மற்றும் பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை இந்திய தோ்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் மேற்கொள்வது தொடா்பான பயிற்சி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான வாக்காளா்களின் சந்தேகங்களுக்கு தீா்வு காணும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணம் இல்லா சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அலுவலக வேலை நேரத்தில் மக்கள் மேற்காணும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள், பெறப்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே டிசம்பா் 9-ஆம் தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறும் என்பதால் வாக்காளா்கள் அனைவரும் கணக்கெடுப்புப் படிவத்தை பூா்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தவறாது ஒப்படைக்க வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை டிசம்பா் 9 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை அளிக்கலாம்.

பின்னா் இறுதி வாக்காளா் பட்டியல் 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படும்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூா், தொண்டாமுத்தூா் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,519 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள், பூா்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்பப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை கண்காணிக்கும் வகையில் 261 கண்காணிப்பாளா்களும், அவா்களுக்கு உதவியாக கூடுதலாக மாநகராட்சி கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் த.குமரேசன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ராமகிருஷ்ணன், வாணிலட்சுமி, மாருதி பிரியா, மண்டல உதவி ஆணையா்கள், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT