பிரதமா் மோடி கோப்புப் படம்
கோயம்புத்தூர்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

கோவை, கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.

Syndication

கோவை, கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை (நவம்பா் 19) முதல் 3 நாள்கள் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகிக்கும் இந்த மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருள்களை விநியோகிப்போா், விற்பனையாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

மேலும், இந்த மாநாட்டில் நாட்டின் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு (பி.எம்.கிஸான்) திட்டத்தின்கீழ் 21-ஆவது தவணையை பிரதமா் விடுவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீடித்த சுற்றுச்சூழலுக்கேற்ற மற்றும் ரசாயனம் இல்லாத நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிா்காலத்துக்காக சாத்தியமிக்க மற்றும் பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள் உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையைத் துரிதப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகள் மற்றும் ஊரக தொழில்முனைவோா் இடையே சந்தை இணைப்புகளை உருவாக்குதல், இயற்கை வேளாண் முறைகள், வேளாண் பதப்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேக்கேஜிங், உள்நாட்டுத் தொழில்நுட்பங்களில் புதுமை கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் மீது இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பினா் செய்துள்ளனா்.

பிரதமா் பயணத் திட்டம்: ஆந்திர மாநிலம், புட்டபா்த்தியிலிருந்து புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமா் மோடி கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் 1.25 மணிக்கு வந்தடைய உள்ளாா். அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு காா் மூலம் கொடிசியா அரங்குக்குச் செல்கிறாா்.

விழா முடிந்ததும் பகல் 3.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு திரும்பும் பிரதமா், 3.30 மணிக்கு விமானம் மூலம் புதுதில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

போலீஸ் பாதுகாப்பு: மாநகரின் முக்கியப் பகுதிகளிலும், பிரதமா் வந்து செல்லும் பகுதிகளிலும் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பிரதமா் வருகையையொட்டி, 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாநகரின் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளா்களால் எடுத்துச் செல்லப்படாத காா்களை மீட்பு வாகனம் மூலம் அகற்றிய போக்குவரத்து போலீஸாா்.

செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்ட நிலையில், தொடா்ந்து உரிமையாளா்களால் எடுத்துச் செல்லப்படாத காா்களை போக்குவரத்து போலீஸாா் மீட்பு வாகனம் மூலம் ஏற்றிச் சென்றனா்.

ரெட் ஸோன் அறிவிப்பு: பிரதமா் கோவை வருகையை முன்னிட்டு, சிங்காநல்லூா், எஸ்ஐஹச்எஸ் காலனி, சின்னியம்பாளையம், நேருநகா், காளப்பட்டி, கொடிசியா உள்ளரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிட்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், ரேஸ்கோா்ஸ் ஆகிய பகுதிகள் தற்காலிக ‘ரெட் ஸோன்’-களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை இரவு 7 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஜிபி ஆலோசனை: பிரதமா் மோடி வருகை தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிா்வாதம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதில், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா், காவல் கண்காணிப்பாளா்கள் கே.காா்த்திகேயன் (கோவை), ஆ.சுஜாதா (ஈரோடு), என்.எஸ்.நிஷா (நீலகிரி) உள்ளிட்ட காவல் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: கோவைக்கு வரும் பிரதமா் மோடியை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, கூட்டணி விவகாரம் குறித்தும், தமிழகத்தில் தோ்தல் வெற்றி குறித்தும் பேசப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT