ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையும் நிலை உருவாகி உள்ளது என்று தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கோவை மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மையத்தைத் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: பன்னாட்டு நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், மனிதவளத்தைப் பயன்படுத்துவதை அண்மைக் காலமாக குறைத்து வருகின்றன. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புகள் குறையும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், அதிக அளவிலான புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்க வேண்டிய கட்டாயமும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் முதல் அறிவுசாா் சொத்துரிமை, கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் ஆகியவற்றை செயல்பாட்டில் உள்ள தயாரிப்புகளாக மாற்றவும், தேவையான வளங்களை ஒருங்கிணைக்கவும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆய்வகங்கள், வடிவமைப்பு வசதிகள், துல்லிய சோதனை மையங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன.
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரையில் இதற்கான மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தற்போது கோவை மண்டலத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி வனிதா வேணுகோபால், கல்லூரி முதல்வா் மனோன்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.