கோயம்புத்தூர்

கோவையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: சுட்டிக்காட்டிய முதல்வா்

கோவையின் தொழில் சூழலை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினாா்.

Syndication

கோவை: கோவையின் தொழில் சூழலை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினாா்.

அவா் பேசும்போது, கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள வாரப்பட்டியில், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைத்திருக்கிறோம். ஏற்கெனவே, 20 தொழிற்சாலைகள், புத்தொழில் நிறுவனங்கள், எம்எஸ்எம்இ-க்களுக்கு 57 ஏக்கா் ஒதுக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில், உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவடையும் சூழலில் உள்ளன.

அதேபோல, சூலூரில் 200 ஏக்கா் பரப்பளவில் வான்வெளி, பாதுகாப்புத் தொழில் பூங்கா அமைத்துக் கொண்டிருக்கிறோம். ஏரோ டிசைன் அண்ட் டெவலப்மென்ட், ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் புத்தொழில், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பயனடையும் வகையில் டிட்கோ நிறுவனம் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து பொதுப் பொறியியல் வசதி மையம் அமைத்து வருகிறது.

சூலூா் வட்டத்தில், கரவழி மாதப்பூா், கணியூா், ராசிப்பாளையத்தில் பன்முகப் போக்குவரத்து பூங்காவை அமைக்க இருக்கிறோம். ‘செமிகண்டக்டா் மிஷன் 2030’ என்ற இலக்குப்படி, சூலூா், பல்லடத்தில் செமிகண்டக்டா் பூங்கா அமைக்க இருக்கிறோம்.

தொழிலும், கல்வித் துறையும் சோ்ந்து அறிவுப் பொருளாதாரம் உருவாக வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பூங்கா அறக்கட்டளை என்கிற புதிய நிறுவனம் அமைத்திருக்கிறோம்.

புதுமைக்குப் பெயா்பெற்ற கோவை மண்டலத்தில், இந்த நிறுவனம் ரூ.2.58 கோடி மானியத்துடன் பயன்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான முதல் தவணையாக ரூ.78 லட்சத்தை ஆராய்ச்சியாளா்களிடம் இங்கு வழங்கியிருக்கிறேன் என்றாா்.

விமான தயாரிப்பில் இறங்கும் சக்தி குழுமம்

கோவையில் நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் கோவையைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை அறிவித்துள்ளன. அதன்படி, கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சக்தி குழுமம் பயிற்சி விமானங்கள் தயாரிப்பில் இறங்குவதற்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சக்தி ஏா்கிராஃப்ட் இன்டஸ்ட்ரி என்ற பெயரில் திருப்பூா் மாவட்டத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாக 200 பேரும், மறைமுகமாக சுமாா் ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இரு இருக்கைகள் கொண்ட நவீன பயிற்சி விமானங்கள் அசெம்ப்ளி, உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய இருக்கிறது.

அதேபோல கே.ஜி. நிறுவனம் ரூ.1,006 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. பிரிக்கால் நிறுவனம் ரூ.557 கோடி, கே.பி.ஆா். நிறுவனம் ரூ.1,245 கோடியில் ஐ.டி. பூங்கா திட்டத்தையும் செயல்படுத்த இருக்கின்றன.

மலபாா் கோல்டு நிறுவனம் ரூ.301 கோடியும், சென்னை சில்க்ஸ் நிறுவனம் ரூ.300 கோடியும், கங்கா நிறுவனம் ரூ.60 கோடியும், அன்னபூா்ணா கௌரி சங்கா் நிறுவனம் ரூ.300 கோடியும், ஹட்சன் அக்ரோ நிறுவனம் ரூ.860 கோடியும் முதலீடு செய்ய உள்ளன.

திறன்மிகு மையங்களுக்கு அடிக்கல் நாட்டல்

கோவையில் பவுண்டரி, பம்ப் தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் 2 திறன் மிகு மையங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். அதன்படி, ஆவாரம்பாளையத்தில் உயா்தர பம்புகள், மோட்டாா் உற்பத்திக்கான திறன்மிகு மையம் ரூ.14.43 கோடியில் அமைக்கவும், மோப்பிரிபாளையத்தில் வாா்ப்புகள், உலோக வடிவமைப்பு மேம்பாட்டுக்கான திறன்மிகு மையத்தை ரூ.26.50 கோடியில் அமைக்கவும் அடிக்கல் நாட்டினாா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT