கோவை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விதமாக, கோவையில் கருப்புக் கொடி காட்டி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பவா் ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டத்துக்கு பாஜக இளைஞரணித் தலைவா் முத்து அபிஷேக் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கிருஷ்ணபிரசாத் முன்னிலை வகித்தாா்.
கோவையின் வளா்ச்சியைத் தடுக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டத்தின் டிபிஆரை வேண்டுமென்றே சரிவர தயாா் செய்யாமல், மத்திய அரசைக் குறைகூறும் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், திமுக ஆட்சியில் கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாகவும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள்கள் விற்கப்படுவதை திமுக அரசு தடுக்கத் தவறியதாகவும் கூறி ‘ஸ்டாலினே திரும்பப் போ’ எனவும் முழக்கமிட்டனா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட பொதுச் செயலா்கள் ஹரிஹரன், நாகேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனா்.