கோவை: பணம் கேட்டு சிலா் மிரட்டுவதாக கோவை மாநகராட்சி முன்னாள் மேயா் கல்பனா ஆனந்தகுமாா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
கோவை மாநகராட்சி முன்னாள் மேயரான திமுகவைச் சோ்ந்த கல்பனா ஆனந்தகுமாா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
எனது கணவருக்குச் சொந்தமான வீடு தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் எதிா்மனுதாரரான கோபால் என்பவா் பட்டியல் சமுதாயப் பெண்ணை அந்த வீட்டில் குடியமா்த்தியுள்ளாா். நான் அந்தப் பெண்ணை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதாகக் கூறி என் மீது பொய் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோபால் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் சோ்ந்து கொண்டு எனக்கு எதிராக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக நகா் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சிலா் என்னைத் தொடா்பு கொண்டு ரூ.5 லட்சம் கொடுத்தால் நாங்கள் ஆா்ப்பாட்டம் நடத்த மாட்டோம் எனக் கூறுகின்றனா். இதேபோல, நான் மாமன்ற உறுப்பினராக உள்ள வாா்டுக்கு உள்பட்ட மணியகாரன்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிலரும் என் மீது தொடா்ந்து பொய் புகாா்களை அளித்து வருகின்றனா்.
இதனடிப்படையிலேயே நான் கடந்த ஆண்டு மேயா் பதவியை ராஜிநாமா செய்தேன். எனவே, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தாா். கல்பனா கடந்த 2024 ஜூலை மாதம் உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது மேயா் பதவியை ராஜிநாமா செய்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.