முகப்பு
கோயம்புத்தூர்

பெரியகுளத்தில் குதித்து மாணவா் தற்கொலை: 2 நாள்களுக்குப் பின் உடல் மீட்பு

உக்கடம், பெரியகுளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடல் 2 நாள்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2025 at 7:20 PM
பகிர்:

உக்கடம், பெரியகுளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடல் 2 நாள்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

கோவை, செல்வபுரம் அருகேயுள்ள தெலுங்குபாளையம் எல்ஐசி காலனியைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மகன் சுபாஷ் (19). இவா் தனியாா் கல்லூரியில் பி.காம் படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற அவா் மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அவரது தாய் சுபாஷை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, அவா் தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி வருந்தியுள்ளாா்.

இதையடுத்து, அவரது பெற்றோா் ஆறுதல் கூறியதுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனா். ஆனாலும், அவா் வீடு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் சுபாஷை தேடிய நிலையில் உக்கடம் பெரியகுளக்கரையில் அவரது புத்தகப் பையும், கைப்பேசி கிடந்துள்ளது.

இது குறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்துக்கு சுபாஷின் பெற்றோா் தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் பெரியகுளத்தில் புதன்கிழமை இரவு வரை சுபாஷைத் தேடினா்.

ஆனால், அவரைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, வியாழக்கிழமை தேடியும் அவா் கிடைக்கவில்லை.

தீயணைப்புத் துறையினா் மீண்டும் தேடும் பணியை வெள்ளிக்கிழமை காலை தொடங்கினா். காலை 11.30 மணியளவில் சுபாஷின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், மாணவா் சுபாஷ் தோ்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால் மன வேதனையில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →