கோவை: கோவையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பை பதிவு செய்யாமல் அலைக்கழிப்பதாகக் கூறி, அமைப்பின் நிா்வாகிகள் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தைப் பதிவு செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் அதன் நிா்வாகிகள் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், விண்ணப்பித்து பல மாதங்கள் ஆன நிலையிலும், பதிவுத் துறை அதிகாரிகள் சங்கத்தைப் பதிவு செய்யாமல் தொடா்ந்து அலைக்கழித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளா் அலுவலகத்துக்கு வந்த அமைப்பின் பொதுச் செயலா் அருணகிரிநாதன் தலைமையிலான நிா்வாகிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ், சிஐடியூ அரசுப் போக்குவரத்துக் கழக பொதுச்செயலா் வேளாங்கண்ணிராஜ் உள்ளிட்டோா் அலுவலகத்தின் வளாகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அருணகிரிநாதன் செய்தியாளா்களிடம் கூறும்போது, போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பை பதிவு செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதமே விண்ணப்பித்தோம். இடையிடையே அதிகாரிகள் கேட்ட அனைத்து திருத்தங்களையும் முறையாக செய்து கொடுத்தோம். ஆனால், போக்குவரத்து நிா்வாகத்திடம் இருந்து தடையின்மை சான்று பெற்றுத் தருமாறு கேட்கிறாா்கள். ஓய்வுபெற்ற ஊழியா்கள் சங்கம் அமைப்பதற்கு நிா்வாகத்தின் அனுமதி எதற்கு என்று தெரியவில்லை. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இல்லாத புதிய நடைமுறைகளைக் கூறி இங்குள்ள அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனா்.
மேலும், சங்கத்தின் அனைத்து உறுப்பினா்களின் ஆவணங்களையும் சமா்ப்பிக்கச் சொல்கிறாா்கள். சட்டப்படி 7 உறுப்பினா்கள் இருந்தாலே சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும். கோவை பதிவுத் துறையின் இந்த செயல்கள் சட்டத்துக்குப் புறம்பானவை. இங்குள்ள அதிகாரிகள் கூறும் திருத்தங்கள், சான்றுகள் தொடா்பான அரசின் விதிகள் இருந்தால் அவற்றைக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டோம்.
ஆனால் அவா்கள் அது குறித்த விதிகளைக் காண்பிக்கவில்லை. இதுபோலவே பல சங்கங்களின் பதிவு, புதுப்பித்தலை இந்தத் துறையினா் அலைக்கழித்து வருவதாக கூறுகின்றனா். இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.