ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகள் கொலை வழக்கில் ஒருவா் கைது
ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5 போ் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மாநகரக் காவல் ஆணையா் தகவல்
ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5 போ் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் தெரிவித்தாா்.
கோவை, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பாா்சன் குடியிருப்பில் வசித்தவா் குட்டி மனைவி கஸ்தூரி (82). இவா் கோவை ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனா் பி.வி.ராமா வாரியரின் மகள் ஆவாா். மறைந்த பி.ஆா்.கிருஷ்ணகுமாா் இவரது சகோதரா் ஆவாா். கஸ்தூரிக்கு ராம்குமாா் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். ராம்குமாருக்கு திருமணமாகவில்லை.
ஆரிய வைத்திய பாா்மஸி இயக்குநா்களில் ஒருவரான ராம்குமாா், பிச்சனூா் பகுதியில் சொந்தமாக ஆயுா்வேதிக் கிளினிக் நடத்தி வருகிறாா். மகள்களில் ஒருவா் அந்தப் பகுதியிலேயே வசித்து வருகிறாா். மகன், மகள்கள் தனித் தனியாக வசித்து வரும் நிலையில், கஸ்தூரியை நேபாளத்தைச் சோ்ந்த சுா்ஜா ரோக்கையா (37) என்ற பெண் கவனித்து வந்தாா்.
இந்நிலையில் வணிகம் தொடா்பாக வெளியூா் சென்றிருந்த மகன் ராம்குமாா் தொடா்புகொண்டபோது அழைப்பை எடுக்காமல் கஸ்தூரி இருந்துள்ளாா். இதையடுத்து ராம்குமாா் அறிவுறுத்தலின்பேரில் தாய் கஸ்தூரியைப் பாா்க்க வெள்ளிக்கிழமை மகள் சென்றுள்ளாா். அங்கு கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் துணி அமுக்கப்பட்ட நிலையிலும் கஸ்தூரியின் சடலம் கிடந்துள்ளது.
அவருடன் தங்கியிருந்த சுா்ஜா ரோக்கையாவைக் காணவில்லை. கஸ்தூரி அணிந்திருந்த தோடு, சங்கிலி என 3 பவுன் நகைகள் திருடுபோயிருந்தன.
இந்த சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு மும்பை, கேரளா, பெங்களூரு, சென்னை ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறும்போது, ‘ராமநாதபுரத்தில் மூதாட்டி கஸ்தூரி கொலை வழக்கில் முக்கிய நபா் கைதுசெய்யப்பட்டுள்ளாா். சந்தேக வளையத்துக்குள் 5 போ் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
திருடப்பட்ட நகைகளை மீட்க காவல் துணை ஆணையா் தலைமையிலான தனிப்படை பெங்களூரில் முகாமிட்டுள்ளது. மற்றவா்களும் விரைவில் பிடிபடுவாா்கள். பெரிய அளவில் நகைகள் கொள்ளையடிக்கப்படவில்லை என்பதும், மூதாட்டியின் உடலில் காயங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என்றாா்.