முகப்பு
கோயம்புத்தூர்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 15 மார்ச், 2026 at 3:08 AM
மோனிக்ராஜ்
பகிர்:

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் செல்வி நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் மோனிக்ராஜ் (22). விவசாயியான மோனிக்ராஜ், சிறந்த உடல்நலப் பயிற்சியாளரும் ஆவாா்.

இவா், தனது தோட்டத்தில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி காலை மோட்டாரை இயக்கச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

Advertisement

இதில் தலையில் பலத்த காயமடைந்த மோனிக்ராஜ் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மோனிக்ராஜ் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து மோனிக்ராஜின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

கல்லீரல், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள வேறொரு தனியாா் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

உறுப்புகள் தானமாகப் பெறப்பட்ட பிறகு, மோனிக் ராஜின் உடல் அரசு மரியாதையுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை மாலை கோவையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.