கோயம்புத்தூர்

அவிநாசி தாமரைக்குளத்தைப் பலப்படுத்த ஆய்வு

DIN

பலத்த மழையால் நிறைந்த தாமரைக்குளம் உள்ளிட்ட குளங்களைப் பலப்படுத்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவிநாசி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதில், குறிப்பாக 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட தாமரைக்குளம் நிரம்பியது. மேலும், அவிநாசி நல்லாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், அவிநாசி-மங்கலம் சாலை, சீனிவாசபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இதையடுத்து, தாமரைக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தாமரைக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மதகைத் திறக்க பொதுப் பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அக்குளத்தில் மதகு அமைக்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி-மங்கலம் சாலையில் தாமரைக்குளத்தில் மதகுக்கு மாற்றாக ராட்சத குழாய் அமைக்கப்பட்டது.
இப்பணியை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ப.தனபால் கூறுகையில், விவசாயிகள், அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு இக்குளம் தொடர்பான பிரச்னைக்கு புதிய தீர்வு காணப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, துணை ஆட்சியர் ஷர்வண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT