அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது வழங்கிய கிராம மக்கள்
மதுக்கரை அருகே அரசு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரின் சிறப்பான பணியைப் பாராட்டி, கிராம மக்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுக்கரை அருகே அரசு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரின் சிறப்பான பணியைப் பாராட்டி, கிராம மக்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த மாச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர் (46), கணித ஆசிரியர். இவர், 2012-ஆம் ஆண்டு இடையர்பாளையம் அரசுப் பள்ளியிலிருந்து பதவி உயர்த்தப்பட்டு திருமலையம்பாளையம் பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின், நீண்டகாலமாக பழமையான கட்டடத்தில் இயங்கி வந்த அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நிதி வழங்கப்பட்டது.
மேலும், தலைமையாசிரியர் சேகர் தனது சொந்த முயற்சியால் ரவுண்டு டேபிள் அமைப்பின் உதவியுடன் பள்ளிக்கு புதிய கட்டடங்களை ஏற்படுத்தினார். அப்பள்ளியின் வளர்ச்சிக்காக, கல்விப் பணியில் சிறப்பாக அவர் பணியாற்றி வந்தார்.
2016ஆம் ஆண்டு இடையர்பாளையம் அரசுப் பள்ளிக்கு தலைமையாசிரியராக சேகர் பொறுப்பேற்றார். இதையடுத்து, திருமலையம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக அவர் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, அப்பகுதியினர் சார்பில் அவரது வீட்டுக்கே சென்று விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்விக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் துரைசாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.