கோயம்புத்தூர்

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற  ரூ.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்: 6 பேர் கைது; வாகனங்கள் பறிமுதல்

DIN

வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக திருப்பூரில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  திருப்பூர், பல்லடம் சாலையில் தனியார் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவிநாசி - திருப்பூர் சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவு பகுதியில் அதிகாரிகள் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனர்.
 அப்போது அவ்வழியே காய்கறி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் 2 டன் செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய நபர்களிடம் விசாரித்தபோது திருப்பூரில் உள்ள குடோனில் செம்மரக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.   அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டதில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9.4 டன் செம்மரக் கட்டைகள் கண்டறியப்பட்டன. மேலும் அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தொடர்பான சில ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 செம்மரக் கட்டைகளை கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி, இரண்டு கார்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட 11.4 டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
 இதையடுத்து இதில் தொடர்புடைய எஸ்.ஐ. முபாரக் (47), வி.கண்ணன் (எ) கார்த்திக் (25), உதுமான் பாரூக் (33), ஏ.சையத் அப்துல் காசீம் (36), கே.அப்துல் ரஹ்மான் (39), தமீம் அன்சாரி (36) ஆகிய 6 பேரை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். 
 அவர்கள் செம்மரக் கட்டைகளை எங்கிருந்து பெற்றனர், எங்கு கடத்த முயற்சித்தனர், அவர்களது வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் செம்மரக் கட்டைகளை சீனாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT