கோயம்புத்தூர்

கோவையில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற சதித் திட்டம்: 3 பேர் மீது போலீஸார் வழக்கு 

DIN

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக செயல்பட்டதாகவும், கோவையில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டியதாகவும் கோவையில் 3 பேர் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
கேரள மாநிலம், கொச்சியில் இருந்து புதன்கிழமை கோவைக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (என்ஐஏ) உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷாகின் ஷா என்ற இப்ராஹிம், ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகிய ஆறு பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 7 இடங்களில் சோதனை நடத்தினர். அதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் முகமது அசாருதீன்என்ற இளைஞரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.  
இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட கோவை மாநகர போலீஸார் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள முகமது உசேன், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சபிபுல்லா , அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜஹான் ஆகியோரது வீடு, கடை மற்றும் அலுவலகங்களில் வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, 3 பேர் மீதும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இதுகுறித்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கோவையைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜஹான், ஷேக் சபியுல்லா ஆகியோர் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்றும், இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்பியும், கோவையில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றது. 
மேலும், இவர்கள் இலங்கையில் குண்டுவெடிப்புகளை நடத்திய ஜஹ்ரன் ஹஷிம் செயல்களைப் புகழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு, போத்தனூர் காவல் நிலையத்தில் உபா சட்டப் பிரிவுகள் 18, 38, 39-ன் படி 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
முகமது உசேன், ஷாஜஹான், ஷேக் சபியுல்லா ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் செல்லிடப்பேசிகள், சிம்கார்டுகள்,  கணினி ஹார்டு டிஸ்குகள், மெமரி கார்டுகள்,பென் டிரைவ்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT