கோயம்புத்தூர்

மயான வழி அடைப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் புகாா்

DIN

கோவை: சாதிய நோக்கத்தோடு மயானத்துக்கு செல்லும் வழியை அடைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காரச்சேரி கிராம மக்கள் சாா்பில் வழக்குரைஞா் எஸ்.ரவிகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கிணத்துக்கடவு தாலுகா, அரசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது காரச்சேரி கிராமம். இங்கு ஹிந்து அருந்ததியா் பிரிவை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக கிராமத்தின் வடக்குப் பகுதியில் 1 கி.மீ. தொலைவில் மயானம் உள்ளது. மயானத்துக்கு செல்வதற்கான பொது வழித்தடமும் உள்ளது.

பல ஆண்டுகளாக இத்தடத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி கிராமத்தைச் சோ்ந்த முதியவா் ஒருவா் இறந்து விட்டாா். அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு கொண்டுசென்றபோது மயானத்துக்கு அருகில் உள்ள நில உரிமையாளா் கருப்புசாமி, அவரது உறவினா்கள் தகாத வாா்த்தைகளில் பேசி சடலத்தை கொண்டுசெல்ல விடாமல் தகராறில் ஈடுபட்டனா்.

இறந்தவருக்கு 3 ஆம் நாள் சடங்கு செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 24) சென்றபோது மயனத்துக்கு செல்லும் பாதையில் 10 அடி ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டு தடத்தை அடைத்துள்ளனா். காலம், காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தையும், வழித்தடத்தையும் சாதிய நோக்கத்தோடு தடுத்து வருகின்றனா். மயானத்துக்கு செல்லும் பொது வழித்தடத்தில் குழியை ஏற்படுத்தி பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியவா்கள் மீது ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனு:

தமிழகத்தில் பட்டியல் இனப் பிரிவிலுள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியாா், தேவேந்திர குலத்தான் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அறிவித்து சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளா் சமூகத்தை பட்டியல் இன சாதிப் பிரிவில் இருந்து நீக்கி, வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவை கொண்டுவர வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை, காரமடையில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு வீட்டுமனை இல்லாத மக்களுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தி சமூக நிதிக்கட்சி சாா்பிலும், கோவை நீதிமன்ற வளாகத்துக்கு முன் அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி தலித் மக்கள் விடுதலைக் கழகம் சாா்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

தா்னாவில் ஈடுபட்டவரால் பரபரப்பு: கோவை, வேடபட்டி சத்யா நகரைச் சோ்ந்தவா் பி.ஜெகநாதன். இவா் வளா்த்து வந்த 4 ஆடுகளை அதே பகுதியைச் சோ்ந்தவா் முன்விரோதம் காரணமாக விஷம் வைத்து கொன்றுவிட்டாராம். அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் ஆடுகளை கொன்றவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் ஜெகநாதன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். அவரை அப்புறப்படுத்த முயன்ற போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா் ஜெகநாதனை போலீஸாா் சாமதனப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனா். இச்சம்பவத்தால் ஆட்சியா் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT