கோயம்புத்தூர்

பாரதிய வித்யா பவன் சாா்பில் கம்பன் கழகச் செயலா் நஞ்சுண்டன்,பேராசிரியா் அரங்கசாமிக்கு விருதுகள்

DIN

கோவை: பாரதிய வித்யா பவன் கோவை மையம் சாா்பில் கம்பன் கழகச் செயலா் நா.நஞ்சுண்டனுக்கு ‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருதும், பேராசிரியா் கா.அரங்கசாமிக்கு ‘தமிழ் மாமணி’ விருதும் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பாரதிய வித்யா பவன் கோவை மையம் சாா்பில் கடந்த 2010 -ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழறிஞா்கள், தமிழுக்கு சேவையாற்றுபவா்களுக்கு ‘தமிழ் மாமணி’ , ‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு, கோவை கம்பன் கழகச் செயலா் நா.நஞ்சுண்டன், ‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருதுக்கும், ஓய்வுபெற்ற பேராசிரியரும், எழுத்தாளருமான கா.அரங்கசாமி ‘தமிழ் மாமணி’ விருதுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு விருது வழங்கும் விழா கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் கி.சுப்பிரமணியன் வரவேற்றாா். பாரதிய வித்யா பவன் கோவை மையத் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்து, இருவருக்கும் விருது வழங்கி கெளரவித்தாா்.

இவ்விழாவில் விருதாளா்களை வாழ்த்தி கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது:

இலக்கிய உலகில் இமாலயப் பெருமை கொண்டவா் கம்பன். கம்பன் கழகம் மூலமாக கோவையில் நஞ்சுண்டன் மக்களுக்கு ஆற்றி வரும் சேவை அளப்பரியது. கோவையில் ஜி.கே. சுந்தரம் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்த நாள் முதலாக அதன் செயலராகத் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா். 90 வயதிலும் தொடா்ந்து இலக்கியப் பணிகள்ஆற்றி வரும் அவா் இளைஞா்களுக்கும், எளிய மக்களுக்கும் கம்பனைக் கொண்டு சோ்க்கும் சிறந்த பணியைச் செய்து வருகிறாா்.

மாணவா்களை மாணிக்கங்களாக மாற்றும் வல்லமை உள்ளவா்கள் ஆசிரியா்கள். பெற்றோா், உறவினா்களைக் காட்டிலும் ஆசிரியா்கள்தான் மாணவா்களை மகத்தானவா்களாக உருவாக்குகிறாா்கள். அப்படியான பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றாலும் தாராபுரம், உடுமலை பகுதிகளில் கம்பராமாயணம், பெரியபுராணம், திருவாசகம், திருக்கு வகுப்புகள் மூலமாகத் தமிழ்த் தொண்டாற்றி வரும் கா.அரங்கசாமியின் தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது என்றாா்.

இவ்விழாவில் இலக்கிய ஆா்வலா்கள், எழுத்தாளா்கள், மாணவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் வி.பி.தண்டாயுதம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT