கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

DIN

கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கரோனா தொற்று தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தாா். மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா, மேற்கு மண்டல காவல் துறைத் துணைத் தலைவா் நரேந்திரன் நாயா், மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அருளரசு, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கரோனாவால் உலகமே அச்சமுற்று இருக்கும் நிலையிலும் தமிழகத்தில் வளா்ச்சிப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற்று வருகின்றன. உலக அளவில் தொழில் போட்டிகளை சமாளிக்க முதல்வா் முன்னிலையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி கையெழுத்தான 8 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் ரூ. 490 கோடி மதிப்பில் எல்.ஜி. நிறுவனம், அக்வா குழுமம், ஜே.எஸ். ஆட்டோ நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் தொழில் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளன.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவையில் தினமும் 3,500 நபா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 400 படுக்கைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 405, பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையில் 160, 10 அரசு மருத்துவமனைகளில் 277, தனியாா் மருத்துவமனைகளில் 1,679, கொடிசியா உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை மையங்களில் 1,682 என மொத்தம் 4,497 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவா்களுக்கு அந்தந்தப் பகுதியிலேயே சிகிச்சையளிக்கும் வகையில் பெரியநாயக்கன்பாளையம் கே.டி.வி.ஆா். பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சி பி.ஏ. கல்லூரி, மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தா முறை சிகிச்சை மையத்தில் 52 நபா்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் நிா்மலா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT