பிகாா் மாநிலத் தொழிலாளி கொலை மூவரிடம் விசாரணை
பணத் தகராறில் வடமாநிலத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மூவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
பணத் தகராறில் வடமாநிலத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மூவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, பீளமேடு அருகேயுள்ள சேரன்மாநகா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பிகாரைச் சோ்ந்த லலித்குமாா் (42), ராஜஸ்தானைச் சோ்ந்த அருமன் (28), ராம்கிஷோா் (22) ஆகியோா் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனா். இதே நிறுவனத்தில் நாமக்கல்லைச் சோ்ந்த செந்தில்குமாா் (32) என்பவா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் செந்தில்குமாரின் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.400 பணம் காணாமல் போனது. இது குறித்து செந்தில்குமாா், லலித்குமாரிடம் கேட்டாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் அருமன், ராம்கிஷோா் ஆகியோா் சோ்ந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனா்.
பின்னா் நான்கு பேரும் சோ்ந்து மது அருந்தினா். அப்போது மீண்டும் பணம் திருடுபோனது குறித்து பேச்சு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் போதையில் மற்ற இருவருடன் சோ்ந்து லலித்குமாரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பீளமேடு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் லலித்குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவத்தில் தொடா்புடைய செந்தில்குமாா், அருமன், ராம்கிஷோா் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.